Last Updated : 06 Feb, 2016 10:37 AM

 

Published : 06 Feb 2016 10:37 AM
Last Updated : 06 Feb 2016 10:37 AM

செம்மை காணுமா செர்பியா? - 4

தன்னுடன் வந்த இருவரும் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல முடிவெடுத்தார் இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட்.

நிறைய பேருக்கு இதில் அதிர்ச்சி. வேண்டாமே என்று தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் நகர கவர்னருக்கு இது கவுரவப் பிரச்னையாகிவிட்டது. “சரயேவு நகரம் முழுவதும் கொலைகாரர்கள் இருப்பதாக நீங்களாக ஏன் கற்பனை செய்துகொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

முதலில் இளவரசரின் மனைவி சோபி மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்படுவதாக இல்லை. ஆனால் தானும் வருவேன் என்று அவள் அடம் பிடிக்க, இருவருமே கிளம்பினார்கள்.

கவர்னர் நன்றாகத்தான் திட்ட மிட்டார். “நகரத்தின் நெரிசல் மிக்க சாலைகளையே தொடாமல், கொஞ்சம் சுற்றுவழியாக இருந் தாலும் வேறொரு வழியின் மூல மாகத்தான் கார் மருத்துவ மனைக்குப் போகவேண்டும்”. ஆனால் ஏதோ குழப்பத்தில் தன்னுடைய இந்த திட்டத்தை கார் ஓட்டுனரிடம் கூறுவதற்கு மறந்து தொலைத்துவிட்டார்.

அரங்கிலிருந்து கிளம்பிய கார் நகரத்தின் மையப்பகுதிக்குச் செல்லும் சாலையில் திரும்பியது. அப்போதுதான் இதை கவனித்த கவர்னர் “என்ன இது? இப்படிப் போகக்கூடாது. அப்பெல் குவே என்ற சாலையின் வழியாகத்தான் போக வேண்டும்” என்று கத்தினார்.

கார் ஓட்டுனர் பிரேக்கை அழுத்தினார். பிறகு மெல்ல மெல்ல காரை ரிவர்ஸில் எடுக்கத் தொடங்கினார். அங்கே அருகில் காத்துக்கொண்டிருந்தான் கவ்ரிலோ பிரின்ஸிப் - கூட்டுச்சதியில் ஈடுபட் டவன். 19 வயது இளைஞன். முன்பக்கமாக நகர்ந்து துப்பாக் கியை எடுத்தான். காரிலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டு பலமுறை சுட்டுத்தள்ளினான்.

இளவரசரின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அவர் மனைவியின் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இளவரசர் நினைவிழந்தார். ஆனால் அதற்கு முன் மனைவியைப் பார்த்து “சோஃபி இறந்துவிடாதே” என்றார்.

கவர்னரின் வீட்டை நோக்கி கார் பறந்தது. அங்கு போய்ச் சேர்ந்தபோது இருவருமே உயிரோடு இருந்தார்கள். என்றா லும் கடும் காயங்களினால் அவர்கள் பிறகு இறந்துவிட்டார்கள்.

இளவரசரை சுட்டவுடன் துப்பாக் கியை தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டான் சதிகாரன். ஆனால் அருகிலிருந்த இருவர் சட்டென அவனை வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் ஒருவனும் பிடிபட்டான். இரண்டு பேரையும் போலீஸ் விதவிதமாக விசாரித்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையைக் கூறிவிட்டார்கள்.

இளவரசர் இறந்ததினால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாகும் அளவுக்கு இந்தக் கொலை பிள்ளையார் சுழி போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை

விஷயத்தைக் கேள்விப் பட்டதும் ஆஸ்திரியா கொதித்துப் போனது. செர்பியாவைச் சேர்ந்த மூவர்தான் இதற்கு காரணம் என்பதை அறிந்து கொண்டது. “செர்பியா அரசு இந்த மூன்று பேரையும் வியன்னாவுக்கு (ஆஸ்திரியாவின் தலைநகர்) உடனடியாக அனுப்ப வேண்டும்'' என்று ஆணையிட்டது. (அம்புகள் தான் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். எய்த வர்கள் செர்பியாவுக்குச் சென்று விட்டிருந்தார்கள்).

செர்பியாவின் அப்போதைய பிரதமர் நிகோலா பாசிக் இதற்கு மறுத்தார். “எங்கள் நாட்டில் கைது செய்தவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்ப முடியாது. ஏனென்றால் எங்கள் சட்டம் இதற்கு இடம் கொடுக்கவில்லை” என்று பதில் அனுப்பினார்.

இளவரசர் கொலை செய்யப் பட்டு சுமார் மூன்று வாரங்களுக்கு அப்புறம்தான் செர்பியாவுக்கு ஆணையிட்டது ஆஸ்திரியா. ஆனால் செர்பியப் பிரதமரின் பதில் கிடைத்த மூன்றே நாட் களில் செர்பியாவின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்தது. ஆக முன்பே தீர்மானித்துவிட்ட முடிவு இது.

இதைத் தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சிகள் மிகவும் வேடிக் கையானவை, மேலும் விபரீத மானவை. சரவெடியின் ஒரு நுனியில் பற்றிக்கொண்ட நெருப்பு எல்லா பட்டாசுகளையும் வெடிக்க வைத்தபடி கடைசி வெடிவரை செல்வதுபோல இந்த யுத்தத்தில் ஒவ்வொரு நாடாக கலந்து கொள்ளத் தொடங்கின.

“கவலையே படவேண்டாம். உங்களுக்கும் செர்பியாவுக்கும் இடையே போர் நடந்து அப்போது ரஷ்யாவும் உங்களுக்கு எதிராக போரில் கலந்து கொண்டால் எங்கள் நாடு நிச்சயம் உங்களுக்குத் துணைவரும்” என்று உறுதி அளித்தார் ஜெர்மனியின் தலைவர் கைசர் இரண்டாம் வில்ஹெம்.

ஆஸ்திரியாவுக்கு நிம்மதி ஏற்பட்டது. ‘நம்மால் செர்பியாவை எளிதில் ஜெயிக்க முடியும். ரஷ்யாவை எதிர்ப்பதுதான் கஷ்டம். ஆனால் இப்போது ஜெர்மனியின் துணை கிடைத்துவிட்டதே’

ஆனால் ஜெர்மனி வேறு விதமாக நினைத்திருந்தது. “அடுத்த மூன்று வருடங்களுக்கு ரஷ்யா இந்த போரில் ஈடுபடாது. ஏனென்றால் அதன் ரயில் பாதைகள் சிறந்தவையாக மாறு வதற்கு மூன்றுவருடங்கள் பிடிக்கும். அதுவரை ரஷ்யாவின் கவனம் தன் ரயில்பாதையை சிறப்பாக்குவதில்தான் இருக்கும்”.

அதாவது ஜெர்மனி தான் இந்தப்போரில் நேரடியாகக் கலந் துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

ஜூலை 23 அன்று ஆஸ்திரிய அரசு செர்பியாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ள வில்லை என்றால் உங்கள் மீது போர் தொடுப்போம் என்றது. இரண்டே நாட்களுக்குள் பதிலை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இந்தக்கடிதம் செர்பியா ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டதே மாலை 6 மணிக்குத் தான்!.

எதற்காக இவ்வளவு அவசரம்? சட்டுப்புட்டென்று போரை நடத்தினால், இதற்கு இதுவரை தயாராக இல்லாத ரஷ்யா போரில் கலந்து கொள்ளாது. சீக்கிரமே செர்பியாவை ஜெயித்துவிடலாம் என்று கணக்குப்போட்டது ஆஸ்திரியா.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x