Last Updated : 03 Jun, 2016 10:41 AM

 

Published : 03 Jun 2016 10:41 AM
Last Updated : 03 Jun 2016 10:41 AM

செம்மை காணுமா செர்பியா?- 15

யுகோஸ்லாவியாவின் போர் குற்றவாளிகளில் மிகவும் அதிகமாக செய்திகளில் இடம் பெற்றவர்கள் செர்பியாவின் ராணுவத் தளபதியான ராட்கோ மிலாடிக் மற்றும் க்ரோவேஷிய-செர்பிய தளபதியான கோரான் ஹாட்ஜிக்.

வடக்கு செர்பியாவிலுள்ள லாஸரேவோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார் ராட்கோ மிலாடிக். விடியற் காலையில் அந்த கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த நான்கு வீடுகளில் ஒரே சமயத்தில் புகுந்தனர் காவல் துறையினர். இந்த நான்கு வீடுகளுமே மிலாடிக்கின் உறவினர்களுக்கானது. சின்னதாக ஒரு நடைபயிற்சி செய்து வரலாம் என்று கிளம்பிய மிலாடிக்கை சூழ்ந்து கொண்டு கைது செய்தார்கள். அவரிடமிருந்த இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் பெல்கிரேடுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நெடுங்காலத்துக்கு காவல் துறைக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார் மிலாடிக். செர்பியாவின் அதிபர் போரிஸ் டாடிக், ‘மிலாடிக்கை கைது செய்து விட்டோம்’ என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உறுதி செய்தார்.

வித்தியாசமான மாறுவேடத்தில் மிலாடிக் இருந்திருப்பார் என்று பலரும் நம்பியிருக்க, அப்படி எதுவும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில்தான் அவர் இருந்தார்.

பெல்கிரேடில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரின் உலக நீதிமன்றம் அவரை விசாரணைக்காக அனுப்பக் கோரியிருந்தது. மிலாடிக்கின் வழக்கறிஞர் மிலாடிக்கின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரது ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் ஹேக் நகருக்குச் செல்வதோ, விசாரணையில் தகவல் அளிப்பதோ முடியாத காரியம் என்றார். ஆனால் அவர் ஹேக் செல்லும் அளவுக்கு உடல் நலம் தகுதியாக இருக்கிறது என்பதை மருத்துவர்களின் மூலம் உறுதி செய்தது நீதிமன்றம். 2011 மே 31 அன்று ஹேக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிலாடிக். அங்கு அவர் விசாரணைக் கைதியாகத் தொடர்கிறார். இந்த வழக்கு 2012 மே, 16 அன்று தொடங்கியது.

செர்பிய அரசு எதனால் தன் முன்னாள் ராணுவ அதிபரைக் கைது செய்ய வேண்டும்? வேறு வழியில்லை. செர்பிய அரசு மிலாடிக்கை மறைத்துப் பாதுகாப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியது. ஐரோப்பிய யூனியனில் உள்ள சக நாடுகள் செர்பியாவை தவிர்க்கத் தொடங்கின. மிலாடிக்கை கைது செய்த பிறகுதான் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செர்பியாவுடன் சுமுகமான உறவைத் தொடர்ந்தன.

மிலாடிக் மீது வைக்கப்படும் பல்வேறு போர்க் குற்றங்களில் முக்கியமானது இது. ஜூலை 12, 1995 அன்று 700 போஸ்னிய ராணுவ வீரர்களும் பொதுமக்களுமாக ஒரு சாலையைக் கடந்து கொண்டிருந்தனர். அப்போது மிலாடிக்கின் ஆணையின்படி செர்பிய ராணுவத்தினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர்.

இந்தக் குற்றச்சாட்டை மிலாடிக்கின் வழக்கறிஞர் மறுத்தார். நேரடி சாட்சிகள் என்று அழைத்து வரப்பட்டவர்கள் தாக்குதல் எப்படித் தொடங்கியது என்பதில் மாறுபட்ட சாட்சியங்களை அளித்தாகக் குறிப்பிட்டார். என்றாலும் அடிப்படையான விஷயங்களும் மிருகத்தனமான தாக்குதலும் எந்தவிதத்திலும் மறுக்கப்படவில்லை.

7000-க்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொன்றதாக மிலாடிக் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

அதுவும் போஸ்னியாவில் செர்பியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை செர்பியா கைப்பற்றியவுடன் அங்கிருந்த 15000 போஸ்னிய முஸ்லிம்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். அவர்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தச் சொல்லி மிலாடிக் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இது போர் நெறிகளுக்கு எதிரான ஒன்று. கடும் போர்க்குற்றம்.

போதாக் குறைக்கு ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த சிலரை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு நடுவில் கோரிக்கைகளை வைத்தார்.

72 வயதான ராட்கோ மிலாடிக் தனது உயர் ராணுவ அதிகாரியாகவும், செர்பிய அதிபராகவும் விளங்கிய மிலோசெவிக்கைத் தாண்டியும் உயிர் வாழ்கிறார்.

பல விபரீதமான போர் கட்டளைகளைப் பிறப்பித்த மிலாடிக், நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி நீதிமன்றத்துக்குள் நுழைந்தவுடன் முதிய வயதை எட்டியுள்ள மிலாடிக் தலையைத் தாழ்த்துவதும் பின் தன் இதயத்தின் மீது இரு கைகளையும் வைத்துக் கொள்வதும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவம்.

இப்போதும்கூட சாட்சிகள் மிலாடிக்கு எதிராக சாட்சியம் கூற பயப்படுகிறார்கள். மூடிய திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர்கள் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் ஒத்துக் கொண்டிருக்கிறது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x