Last Updated : 26 Dec, 2015 04:48 PM

 

Published : 26 Dec 2015 04:48 PM
Last Updated : 26 Dec 2015 04:48 PM

சுவீடனில் வேலை நேரம் 6 மணி நேரமாகக் குறைப்பு

சுவீடனில் தினசரி வேலை நேரம் படிப்படியாக 6 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுமே இதன் நோக்கம் ஆகும்.

ஏற்கெனவே நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலை நேர குறைப்பை அமல்படுத்தி உள்ளதாக ‘சயன்ஸ் அலர்ட்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்குக்கூட இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

குறுகிய நேரத்தில் கூடுதல் உற்பத்தி திறனுடன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, தங்களது தனிப்பட்ட வாழ்வில் கூடுதல் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட அனுமதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுவீடனின் கோதன்பர்க் நகரில் உள்ள டொயோட்டா மையங்களில் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலை நேர குறைப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த தொழிலகங்களில் ஊழியர்கள் உற்சாகமாக வேலைக்கு வருவதாகவும், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும், லாப விகதம் அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிலிமன்டஸ் நிறுவனம் (செல்போன் ஆப் கண்டுபிடிப்பாளர்) கடந்த ஆண்டே 6 மணி நேர வேலை திட்டத்தை அறிமுகம் செய்தது.

பிலிமன்டஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லைனஸ் பெல்ட் கூறும்போது, “தினசரி 8 மணி நேரம் வேலை என்பது நாம் நினைப்பதுபோல பலன் தரத்தக்கது அல்ல. 8 மணி நேரம் ஒரே வேலையில் கவனம் செலுத்துவது என்பது மிகப்பெரிய சவால். வேலை நேரத்தைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களை பயன்படுத்த ஊழியர்களை அனுமதிப்பதில்லை. ஆலோசனைக் கூட்டங்களை வெகுவாக குறைந்துள்ளோம். அலுவலக நேரத்தில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற ஊக்கம் தருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x