Last Updated : 02 Jan, 2015 12:19 PM

 

Published : 02 Jan 2015 12:19 PM
Last Updated : 02 Jan 2015 12:19 PM

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 2

மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்த நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் தேசியப் பண் மலாய் மொழியில்தான் உள்ளது.

ஆனால் இங்கு மிக அதிகமாக வசிப்பவர்கள் சீனர்கள். அடுத்த இடம்தான் மலாய் மக்களுக்கு. இவர்களின் எண்ணிக்கையில் உள்ள இடைவெளியும் மிக அதிகம். சிங்கப்பூரில் வசிப்பவர்களில் சீனர்கள் சுமார் 75 சதவிகிதம்பேர். மலாய் மக்களின் சதவிகிதம் 13 மட்டுமே. (மூன்றாமிடம் இந்தியர்களுக்கு - 9 சதவிகிதம்பேர்).

மலாய் தேசிய மொழியாக அங்கு இருப்பதற்குக் காரணம் அதன் வரலாறு (மட்டுமே). சிங்கப்பூரில் வசிப்பவர்கள் ஐந்தில் ஒருவருக்குக்கூட மலாய் பேசத் தெரியாது. சீன மொழி பேசுபவர்கள் 51 சதவிகிதம்பேர் உள்ளனர். மலாய் மொழி 13 சதவிகிதம், தமிழ் 7 சதவிகிதம்.

சிங்கப்பூரில் நான்கு ஆட்சி மொழிகள், ஆங்கிலம், மலாய், மாண்டரின் சைனிஸ், தமிழ். ஆங்கிலம்தான் முக்கிய மொழி. சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் 60 சதவிகிதம்பேர் தமிழ் பேசுபவர்கள். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களும் ஓரளவு உண்டு.

ஆக மிக அதிகமாக சிங்கப்பூரில் வசிப்பவர்கள் வெளிநாட்டினர்தான். (என்றாலும் ஆசியர்கள்). ஏன் இப்படி?

சுல்தானுக்கும் பிரிட்டனுக்கும் 1819ல் உண்டான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நவீன சிங்கப்பூர் பிறந்தபோது அங்கு நிலவரம் எப்படி என்பதைத் தொடர்ந்து அறிந்தால் புரிந்து விடும்.

அப்போது சிங்கப்பூரில் வசித்தவர்கள் வெறும் ஆயிரம்பேர்தான். அடுத்த ஐம்பது வருடங்களில் சிங்கப்பூரின் மக்கள் தொகை ஒரு லட்சம் என்று ஆகியது. அங்குள்ள ரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறையபேர் வந்து சேர்ந்தனர். (இவர்களின் வாரிசுகள்தான் இப்போதைய சிங்கப்பூரின் மெஜாரிட்டி குடிமக்கள்).

மிகவும் பழங்காலத்தில் கூட சிங்கப்பூர் ஒரு குறிப்பிடத்தக்க வணிக கேந்திரமாக விளங்கியது. பதினான்காம் நூற்றாண்டில் சிங்கபுரா ராஜ்ஜியம் சிறப்பாகவே இருந்தது. விஜய இளவரசர் பரமேஸ்வராவின் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு முக்கியமான துறைமுகம். ஆனால் பல்வேறு பண்டைய ஆதிக்க சக்திகளால் இந்தத் துறைமுகம் அழிக்கப்பட்டது.

பிரிட்டாஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் குத்தகைக்கு வந்த பிறகு 1819ல் மீண்டும் புத்துயிர் பெற்றது சிங்கப்பூர் துறைமுகம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்குள் வந்திருந்தது அந்தப் பகுதி. முழுக்க, சுயநலம் காரணமாக, சிங்கப்பூரில் துறைமுகத்தை உண்டாக்கி நவீனப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு.

இந்தியா, சீனா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் வணிகம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அது ஒரு நுழைவுத் துறைமுகமாக ஆனது. 1867ல் சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனி ஆனது. அதாவது இதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியால் நிர்வகிக்கப்பட்ட அது நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தது. அடுத்த இரு நூற்றாண்டுகளில் மாபெரும் வானுயரக் கட்டிடங்கள் சிங்கப்பூரில் எழுந்தன.

1869ல் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டவுடன் சிங்கப்பூரின் மகத்துவம் மேலும் அதிகமானது. ஐரோப்பாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் உள்ள நுழைவாயிலாக அது பயன்பட்டது. ரப்பர் மற்றும் தகரம் ஆகியவற்றை எக்கச்சக்கமாக ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தது சிங்கப்பூர்.

வருடங்கள் நகர்ந்தன. வந்தது சிங்கப்பூர் போர். இதை ஃபால் ஆப் சிங்கப்பூர் என்றும் கூறுவார்கள். இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளின் பிடியில் இருந்த நாடுகளை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஜப்பான். அந்த வகையில் சிங்கப்பூர் மீதும் அதன் கண் பதிந்தது. அதுவும் பிரிட்டிஷாரின் தென்கிழக்கு ஆசியாவின் ராணுவ அடித்தளமாக விளங்கிக் கொண்டிருந்தது சிங்கப்பூர். 1942 பிப்ரவரி 8ம் தேதி அன்று தொடங்கிய இந்தப் போர் ஒரு வாரத்துக்கு நீடித்தது.

வெற்றி பெற்ற ஜப்பானின் வசம் சென்றது சிங்கப்பூர். சுமார் 80,000 பிரிட்டிஷ் தரப்பு ராணுவ வீரர்கள் கைதிகளாக்கப்பட்டனர். தங்கள் சாம்ராஜ்யத்தின் மாபெரும் நஷ்டமாக இதைக் கருதுவதாக அறிக்கை வெளியிட்டார் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்.

குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற படுகொலைகளைச் சொல்ல வேண்டும். அந்த மருத்துவமனையின் முழுப் பெயர் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனை.

பிப்ரவரி 14 அன்று அந்த மருத்துவமனையை அணுகியது ஜப்பானிய ராணுவம். நடைபெற இருக்கும் விபரீதத்தை உணர்ந்த பிரிட்டிஷ் தரப்பு ராணுவ அதிகாரி ஒருவர் தன் கையில் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி அவர்களை நோக்கி வந்தார். ஜப்பான் ராணுவ அதிகாரி ஒருவர் அவரைத் தன் துப்பாக்கிக் கத்தியால் சீவித் தள்ளினார். ராணுவம் முன்னேறியது. மருத்துவமனையில் இருந்த பல நோயாளிகளைக் கொன்றது. அறுவைசிகிச்சை அறையில் இருந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை. 200 மருத்துவமனை ஊழியர்களை அங்கிருந்து வேறிடத்துக்கு நடக்க வைத்து, காற்றுப்புகாத அறைகளில் தங்க வைத்து அடுத்த நாள் கொன்றனர்.

(அந்த நிகழ்வில் மறைந்து தப்பிப் பிழைத்த ப்ரைவேட் ஹெய்னெஸ் என்பவர் தன் மகளுக்கு எழுதிய கடிதம் 2008-ல் பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ஜப்பானுக்கு சங்கடத்தை அளித்தது).

பிரிட்டன் சிங்கப்பூர் போரில் சரணடைந்தது. சரணடைந்ததை ஏற்றுக் கொள்ள ஜப்பான் நாடு விதித்த நிபந்தனைகள் அதிகமானவை.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x