Last Updated : 24 Nov, 2015 05:29 PM

 

Published : 24 Nov 2015 05:29 PM
Last Updated : 24 Nov 2015 05:29 PM

சிரியாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: துருக்கி ராணுவ நடவடிக்கையால் பதற்றம்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்த ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது.

சிரியாவில் சன்னி, ஷியா முஸ்லிம் களுக்கு இடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, இராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது.

இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக கடந்த செப்டம்பரில் ரஷ்ய ராணுவம் சிரியாவில் களமிறங்கியது. அங்கு 69 போர் விமானங்கள், அதிநவீன ரேடார் கருவிகள், ஏவுகணை தடுப்பு சாதனங்களை அமைத்துள்ள ரஷ்ய விமானப் படை, செப்டம்பர் முதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அண்மைகாலமாக அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக அக்டோபர் 31-ம் தேதி எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடுவானில் வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் 224 பேர் உயிரிழந்தனர்.

திடீர் பதற்றம்

இதனிடையே சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறப்பதாக துருக்கி அரசு அடிக்கடி குற்றம் சாட்டி வந்தது. அண்மையில் ரஷ்யாவின் ஆளில்லா விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டுவீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து சிரியா எல்லையில் பறந்த ரஷ்யாவின் சுகோய் எஸ்.யூ.24 ரக போர் விமானத்தை துருக்கியின் எப்.16 ரக போர் விமானம் நேற்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது. இதில் தீப்பிடித்து எரிந்த ரஷ்ய விமானம் எல்லையோர கிராமத்தில் விழுந்தது. இது அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்தத் தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நேட்டோவுடன் ஆலோசனை

அமெரிக்க கூட்டுப் படையான நேட்டாவில் துருக்கி அங்கம் வகிக்கிறது. ரஷ்ய விமானத்தை அந்த நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியிருப்பதால் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் துருக்கி பிரதமர் அகமது அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

விமானி சிறைபிடிப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை சுற்றி நஸ்ரா முன்னணி என்ற அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கோஷமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

மற்றொரு விமானியை கிளர்ச்சிப் படையினர் சிறைபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதுகில் குத்திவிட்டார்கள்: அதிபர் புதின் ஆவேசம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது:

சிரியாவில் வேரூன்றியுள்ள தீவிரவாதத்தை அழிக்க ரஷ்யா தீவிரமாகப் போரிட்டு வருகிறது. இதற்காக அங்கு முகாமிட்டிருந்த சுகாய் எஸ்.யூ. 24 போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் எப்-16 போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் முதுகில் குத்தியதற்கு சமமாகும். இதுபோன்ற குற்றங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் ரஷ்ய, துருக்கி உறவில் வருந்தத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே துருக்கி தலைநகர் அன்காராவில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து அந்த நாட்டு அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், துருக்கி எல்லையில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x