Last Updated : 05 Oct, 2015 11:27 AM

 

Published : 05 Oct 2015 11:27 AM
Last Updated : 05 Oct 2015 11:27 AM

சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மைரா வளைவை தகர்த்தது ஐ.எஸ்.

சிரியாவில் தொன்மையான பல்மைரா நகரத்தின் வளைவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்ததாக அந்நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து வருகின்றனர்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அடையாளம் காணப்பட்ட சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பகுதியின் பால் சாமின் கோயிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கெனவே தகர்த்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா நகரத்தை கடந்த மே மாதமே ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், தற்போது பல்மைராவின் மற்றொரு சிறப்பு வாய்ந்த 'தி ஆர்க் ஆஃப் ட்ரைம்ஃப்' எனப்படும் வளைவை தகர்த்துள்ளனர்.

இந்த வளைவு சிரியாவை ரோமானிய பேரரசால் பெர்சியாவுடன் இணைக்கும் வகையில் எழுப்பப்பட்டது. இந்த வளைவு தகர்க்கப்பட்டதை கலீத் அல்-ஹொம்ஸி என்ற ஆர்வலரால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த தீவிரவாதிகள் பல்மைராவில் இருந்த முதலாம் நூற்றாண்டு கோயில்களை தகர்த்தனர்.

சிரியா மற்றும் இராக்கின் பல நகரங்களை கைக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரத்தை சிதைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று சிரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக அச்சம் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப இப்போது தீவிரவாதிகள் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இவர்கள் ஏற்கெனவே மொசூல் நகரை தங்களது வசத்தில் வைத்துக் கொண்டு அங்கிருந்த 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x