Published : 10 Dec 2013 09:30 AM
Last Updated : 10 Dec 2013 09:30 AM

சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’வில் கலவரம்: 27 பேர் கைது

சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்ததால், தெற்காசியர்கள் கலவரத்தில் இறங்கினர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வன்முறை வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி இரவு, லிட்டில் இந்தியா பகுதியில் சக்திவேல் குமாரவேலு(33) என்பவர் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.

சக்திேவல் ஹெங் ஹப் சூன் என்ற நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்.

கலவரம்

கலவரத்தின் போது, 3 போலீஸ் வாகனங்கள், ஒரு இரு சக்கர வாகனம், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடந்த 40 ஆண்டு கால சிங்கப்பூர் வரலாற்றில் இது போன்ற மோசமான வன்முறை ஏற்பட்டதில்லை. இதில், 10 போலீஸார் உள்பட 18 பேர் காயமடைந்தனர். இக்கலவரத்தில் 400க்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபடுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தெற்காசியாவைச் சேர்ந்த 27 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் 24 பேர் இந்தியர்கள்.

பிரதமர் எச்சரிக்ைக

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இது தொடர்பாகக் கூறுகையில், “இந்த வன்முறை மிகவும் மோசமான சம்பவம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கப்பூர் மக்கள் அமைதி காக்க வேண்டும்.

இது போன்ற சட்டத்துக்குப்புறம்பான செயல்களை எனது அரசு சகித்துக் கொள்ளாது. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யும்படியும், இதில் சம்மந்தப்பட்டவர்களை சிங்கப்பூரின் சட்டத்துக்கு உட்பட்டு, நேர்மையாகவும் கடுமையாகவும் விசாரிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

காவல்துறை ஆணையர் என்ஜி ஜூ ஹி கூறுகையில், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கண்ணாடி பாட்டில்கள், கம்பிவலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வீசி எறிந்தனர். இருப்பினும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.

திட்டமிட்ட வன்முறை, கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், காவல்துறையினருடன் மோதல் இவையெல்லாம் சிங்கப்பூரின் வழக்கமில்லை. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து, அனைவருக்கும் தண்டனை அளிப்போம். இதனை சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் உறுதிபடக் கூறுகிறோம்.” என்றார்.

லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியர்கள், வங்கதேசத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் விஜய் தாகுர் கூறுகையில், "அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். சம்பவம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இடை விடாத தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழர்கள். இந்த வன்முறைச் சம்பவத்தால் தமிழர்கள் அங்கு பணிபுரிவதில் சிக்கல் எழக்கூடும் என அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x