Published : 22 Feb 2015 02:28 PM
Last Updated : 22 Feb 2015 02:28 PM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 5

இறை வெளிச்சம் கிடைக்கப் பெற்ற நபிகள் நாயகம் கூறியதன் தொகுப்புதான் திருகுர்ஆன். கி.பி.622-ல் தன்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதை அறிந்ததும் தன் தொண்டர்களுடன் யாத்ரிப் என்ற நகருக்குக் குடிபெயர்ந்தார் (அதுதான் இன்றைய மதீனா). இப்படி நபிகள் நாயகம் தன் இடத்தை மாற்றிக் கொண்ட தினமான ‘ஹிஜ்ரா’தான் இஸ்லாமிய காலண்டரின் தொடக்கமானது. (ஹிஜ்ரா என்றால் வேறொரு இடத்துக்குக் குடிபெயர்தல் என்று பொருள்).

அடுத்த சில வருடங்கள் முகமது நபிகளின் தொண்டர்களுக்கும் மெக்காவில் உள்ள ‘பேகன்’களுக்கும் (pagans என்பது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியவர்களைத் தவிர மீதிப் பேரைக் குறிக்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம்) தொடர்ந்து பல போராட்டங்களைச் சந்தித்தன.

பிற பகுதிகளில் அவரது புதிய மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தவர்களும் முகம்மது நபிகளோடு சேர்ந்து கொண்டனர். இஸ்லாம் என்பது அவர்களை இறுக்கமாக இணைக்கும் இழை ஆனது. அதன் பின்னர் மீண்டும் மெக்காவை அடைந்தபோது அவர்களுக்கு எந்த வெளிப்படையான எதிர்ப்பும் இல்லாமல் போனது.

ஆக அரேபிய தீபகற்பத்தில் அரபு முஸ்லிம்களுக்கு மதமும் அரசியலும் இணைந்த ஒரு தனித்துவப் பகுதி ஆளுகைக்குள் வந்தது.

அடுத்த நூற்றாண்டில் இஸ்லாம் மிக அதிக அளவில் பெருகியது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி உருவாகியது ஒரு பரந்து விரிந்த முஸ்லிம் அரபு சாம்ராஜ்யம். இந்திய தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதி, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தெற்கு இத்தாலி, என்றெல்லாம் பரவி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இதன் காரணமாக வேறெரு விந்தையும் நிகழ்ந்தது. நபிகள் நாயகம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பத் தொடங்கியது மெக்கா மற்றும் மதீனாவிலிருந்துதான். ஆனால் அரபு சாம்ராஜ்யம் விரிவடைந்தவுடன் அரசியல் முக்கியத்துவம் டமாஸ்கஸ், பாக்தாத், கெய்ரோ ஆகிய நகரங்களுக்கு மாறிவிட்டது (இவை தற்போதைய சிரியா, இராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைநகரஙகள்).

ஆனால் இஸ்லாமின் புனிதத்தலங்கள் என்ற அந்தஸ்தை மெக்காவும் மதீனாவும் அழுத்தமாகவே தக்க வைத்துக் கொண்டன. நபிகள் இறந்த பிறகும் இஸ்லாம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

உலகெங்கிலும் இஸ்லாமியக் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் அரேபிய தீபகற்பத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் கணிசமானவர்கள் மெக்கா மற்றும் மதீனாவில் குடியேறத் தொடங்கினர். அரேபியாவின் பிற பகுதி நாகரிகங்களும் முஸ்லிம் உலகும் சங்கமமாயின. இதன் காரணமாக அரபு மொழி செழிப்படைந்தது.

பதினேழாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய சாம்ராஜ்யம் தழைத்தது. ஆனால் அதன் பிறகு காலப்போக்கில் அரேபியாவின் வணிகம் குறைந்தது. செல்வச் செழிப்பு இறக்கம் கண்டது. ஷேக்குகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். பாரசீக மன்னர்களும், ஒட்டாமன் துருக்கியர்களும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, அரேபியா தன் தனித் தன்மையை இழந்தது.

அதற்குப் பிறகு அது சின்னச் சின்ன முஸ்லிம் ராஜ்யங்களாகப் பிரிந்துவிட்டது. என்றாலும் மெக்காவும் மதீனாவும் பல நாடுகளிலிருந்தும் பயணிகளைக் கவர்ந்திழுக்கத் தவறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் முஸ்லிம் அறிஞரான ஷேக் முகம்மது பின் அப்துல் வஹாப் என்பவர் இஸ்லாமின் மூலக் கோட்பாடுகளுக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பதை வெளிப்படையாக வலியுறுத்தத் தொடங்கினார். உள்ளூர் மதவாதிகளுக்கு இது பிடிக்கவில்லை.

தங்கள் பதவிகளுக்கு வேட்டு வந்து விடுமோ என்ற பயம்! வஹாபை தண்டிக்க முயற்சித்தனர். தனக்குப் பாதுகாப்பு கோரி வஹாப், திரியா என்ற சிறுநகரின் ஆட்சியாளரைக் கேட்டுக் கொண்டார். அவர் பெயர் முகம்மது பின் சவுத்.வஹாபும் சவுத்துமாக சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ‘இருவருமாகச் சேர்ந்து நிஜமான இஸ்லாம் மார்க்கத்தை முஸ்லிம்களிடையே கொண்டுவர நம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’. இதற்கென உருவானது முதல் சவுதி நாடு. இதன் ஆன்மிக குருவாக விளங்கினார் வஹாப்.

வஹாபிஸம் என்பது சவுதி அரேபியாவில் இன்றும் உள்ள ஒரு பிரிவினரின் கொள்கை. சரித்திர மற்றும் மதத்திற்கான முக்கியத்துவம் உள்ள கட்டிடங்கள் என்று எதுவுமே இருக்கக் கூடாது என்பது இவர்களது கொள்கை. காரணம் இதை அனுமதித்தால் நாளடைவில் இஸ்லாமிய மார்க்கத்துக்குள் மெல்ல மெல்ல உருவ வழிபாடு நுழைந்து விடும் என்ற கவலை.

இதனால்தான் ஆயிரம் வருடங்களுக்கும் அதிகத் தொன்மை உடைய மெக்காவில் இருந்த தொண்ணூறு சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதில் பல இஸ்லாமிய வி.ஐ.பி.க்கள் எழுப்பிய மசூதிகளும் அடக்கம். இரண்டு உதாரணஙகள் – நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா கட்டிய மசூதி, நபிகள் நாயகத்தின் மாமனார் அபுபக்கர் எழுப்பிய மசூதி. நபிகள் நாயகத்தின் மனைவி கதிஜாவின் வீடும் மேற்கூறிய காரணத்துக்காக இடிக்கப்பட்டன. ஆக, முகமது நபி காலத்தில் இருந்த கட்டிடங்களில் தப்பித்து இன்று வரை அங்கு இருப்பவை மிகச் சொற்பமானவைதான்.

உலகம் உருளும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x