Last Updated : 20 Nov, 2014 09:37 AM

 

Published : 20 Nov 2014 09:37 AM
Last Updated : 20 Nov 2014 09:37 AM

கொலைதேசமா கொலம்பியா? - 3

போதைக் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் கொலம்பியாவின் ஆரம்பத்தைத் தெரிந்து கொள்வோமா?

கொலம்பியாவின் பழங்காலச் சரித்திரம் தொடர்பான விவரங்கள் கிட்டத்தட்ட பதிவாகவே இல்லை. அதாவது ஸ்பானியர்கள் கொலம்பியாவை அடையும்வரை. கி.பி. 1510ல் ஸ்பானியர்கள் கொலம்பியாவில் டாரியன் என்ற பகுதியில் நிரந்தரமாகக் குடியேறினார்கள். சொல்லப்போனால் அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் முதல் நிரந்தரக் குடியேற்றம் என்றுகூட இதைக் குறிப்பிடலாம்.

கொலம்பியா எனப்படும் கொலம்பியக் குடியரசு பல பெயர் மாற்றங்களைக் கண்டபிறகுதான் இந்தப் பெயரைப் பெற்றது. 1538-ல் அவர்கள் நியூ கிரானடா என்ற காலனியை உருவாக்கிக் கொண்டார்கள். 1861-ல் அது ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் நியூ கிரானடா’ என்று பெயர் மாற்றம் கொண்டது. 1863-ல் மீண்டும் ஒரு பெயர் மாற்றம் - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கொலம்பியா. பிறகு 1885-ல் கொலம்பியக் குடியரசு என்று ஆனது.

கொலம்பஸ் பெயரில்தான் கொலம்பியா விளங்குகிறது என்றாலும் கொலம்பஸ் கொலம்பிய மண்ணில் கால் பதித்ததில்லை. அவருடன் பயணம் செய்த அலோன்ஸோ ஒஜேடா என்பவர்தான் தன் காலை கொலம்பியாவில் பதித்தார்.

பதித்தவருக்குப் பெரும் வியப்பு. அங்கு கால காலமாக வசித்த உள்ளூர்வாசிகள் செல்வ வளம் கொண்டவர்களாக இருந்தனர். (ஒரு சிறு விளக்கம். ஒரு கண்டத்தையோ, தேசத்தையோ ஒருவர் கண்டுபிடித்தார் என்றால் அங்கு ஏற்கனவே மனிதர்களே இல்லை என்று அர்த்தம் அல்ல. உலகின் பிற பகுதிகளோடு தொடர்பே இல்லாமல் இருந்தனர் என்றுதான் அர்த்தம்).

‘‘ஐயோ, இது எல் டொரேடோ’’ என்று ஆனந்தக் கூக்குரலிட்டார். எல் டொரேடோ என்பது மாணிக்கக் கற்கள் மின்னும் தங்க மலைகள் அடங்கிய கற்பனைப் பிரதேசம். கொலம்பியாவைப் பற்றி அலோன்ஸோ எதனால் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டும்? ஏற்கனவே தென் அமெரிக்காவைப் பற்றி இதுபோன்ற பல கற்பனைக் கதைகள் காற்றுவாக்கில் கலந்திருந்தன என்பது ஒரு காரணம். தவிர உள்ளூர் வாசிகள் தங்கள் சடங்குகளின்போது புனித நதிகளில் தங்கக் காசுகளை வீசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அலோன்ஸோ பிரமித்துப் போனார்.

பிறகென்ன, ஸ்பெயின் தனது வணிகத்தை அங்கு தொடங்கியது. முக்கியமாக சான்டா மார்ட்டா என்ற கொலம்பிய நகரிலிருந்து மாணிக்கக் கற்களை வாங்கத் தொடங்கியது. ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் புதுப் பகுதிகளில் வணிகம் செய்யத் தொடங்கும். அடுத்ததாக என்ன செய்யும்?

கரெக்ட். அதே தான். கொலம்பியாவை ஆக்ரமித்துக் கொண்டது ஸ்பெயின். அதைத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்தது. நாளடைவில் சுரங்கங்களில் வேலை செய்ய உள்ளூர் ஆட்கள் போதவில்லை. ஆப்ரிக்காவிலிருந்து கப்பல் கப்பலாக அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அவர்கள் உள்ளூர் வணிகர்களுக்கு விற்கப்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டில் உள்ளூர் வாசிகளின் எண்ணிக்கையைவிட இறக்குமதி செய்யப்பட்ட கருப்பர்களின் எண்ணிக்கை அதிகமானது. கலப்பு மணங்கள், பலவித இனங்கள் என்றெல்லாம் மாறுதல்கள் ஏற்பட்டாலும், ஆட்சி அதிகாரம் ஸ்பெயின் கையில் என்பதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த காலகட்டத்தில் (1717ல்) பொகோடா ஸ்பெயினின் தலைநகரமானது.

அந்தக் காலத்தில் கொலம்பியா என்பது பனாமா, ஈக்வேடார், வெனிசுவேலா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அடிமை வாழ்வு தாங்க முடியாமல் போனதும் வரி விகிதம் அதிகமாகிக் கொண்டே போனதும் முக்கியமான இரண்டு காரணங்களாக அமைந்தன. நெப்போலியன் தன் தம்பியை ஸ்பெயினுக்கு அரசனாக நியமித்த போது கிளர்ச்சிகள் அதிகமாயின. புதிய சக்ரவர்த்தியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

கொலம்பியாவின் பல்வேறு பகுதிகள் தாங்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவித்தன. ஆனால் அரசியல் பிரிவுகளும் உள்குத்து வேலைகளும் தொடர்ந்தன என்பதுதான் சோகம். போராட்டங்கள் வலுப்பெற்றன. சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் சைமன் பொலிவர். சைமன் பொலிவர் வெனிசுவேலா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர். பொலிவியா என்ற நாடு இவர் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. (அதன் பழைய பெயர் ‘அப்பர் பெரு’) ஒரு நாட்டுக்கே இவரது பெயர் சூடப்படும் அளவுக்கு இவர் என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா?

சைமன் பொலிவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பப்பட்டு கல்வி பயின்றவர். ஐரோப்பிய அரசியலில் எக்கச்சக்கமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1808-ல் ஸ்பெயினை ஃபிரான்ஸ் ஆக்ரமித்தது. எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். இவருக்காகவே இவர் பெயரில் உருவானது பொலிவியக் குடியரசு.

காதல் மனைவி மரியா தெரஸா மஞ்சள் காமாலையில் இறந்துவிட, நெப்போலியனுடன் (பெயரின் முதல் பாதியை வைத்துக் கொண்டு மதுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டாம். இவர் சக்ரவர்த்தி நெப்போலியன்) நட்பு கொண்டார். ஆனால் நெப்போலியன் வெனிசுவேலா உட்பட்ட பகுதிகளை ஆக்ரமிக்க உத்தரவிட்டவுடன் இவர் அதை எதிர்க்கத் தொடங்கினார்.

சைமன் பொலிவர் சுதந்திரப் போராட்டத்தின் தலைவரானார். ஸ்பானிய ராணுவத்துக்கு எதிராக அவர் நடத்திய ஆறு யுத்தங்களிலும் வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவு அவருக்குப் பெருகியது. என்றாலும் இவற்றைத் தொடர்ந்து அவர் தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.

இவற்றின் சிகரமான போர் என்று 1819 ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற யுத்தத்தைச் சொல்லலாம். சைமன் பொலிவர் இதில் தன் தரப்பு வெற்றியை அழுத்தமாகவே பதிவு செய்தார். கொலம்பியா சுதந்திரம் பெற்றது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x