Last Updated : 30 May, 2016 05:30 PM

 

Published : 30 May 2016 05:30 PM
Last Updated : 30 May 2016 05:30 PM

குழந்தையை காப்பாற்ற கொரில்லாவைக் கொன்ற ஓஹியோ உயிரியல் பூங்கா

''கடினமான முடிவுதான் என்றாலும், குழந்தையைக் காப்பாற்றி சரியான முடிவையே எடுத்திருக்கிறோம்''.

உயிரியல் பூங்காவில் கொரில்லா அகழிக்குள் தவறி விழுந்த, மூன்று வயது சிறுவனைப் பிடித்து இழுத்த 17 வயது கொரில்லாவைக் கொன்றிருக்கிறது அமெரிக்காவின் ஓஹியோ மாகாண உயிரியல் பூங்காவின் அவசர கால சிறப்புக் குழு.

இதுகுறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், "எங்கள் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்த மூன்று வயது சிறுவன் சுமார் 10 முதல் 20 அடி வரை இருந்த கொரில்லா அகழியில் தவறி விழுந்துவிட்டான். அங்கிருந்த கொரில்லா, சிறுவனை சுமார் 10 நிமிடங்கள் பிடித்து இழுத்தது. சிறுவனின் பெற்றோரும், அங்கிருந்தவர்களும் பயந்து அலற, விரைந்து வந்த எங்கள் அதிகாரிகள் வேறு வழியின்றி கொரில்லாவைக் கொன்றனர்.

கொரில்லாவின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவன், பின்னர் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

ஹராம்பே என்ற பெயர் கொண்ட 400 பவுண்டுக்கும் மேல் எடையுள்ள கொரில்லா அது. அந்த சிறுவன் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்ததால் இந்த சோகமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது. கடினமான முடிவுதான் என்றாலும், குழந்தையைக் காப்பாற்றி சரியான முடிவையே எடுத்திருக்கிறோம்.

சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து இன்னும் பேசவில்லை. உயிரியல் பூங்காவில் ஒரு விலங்கைக் கொல்வது இதுவே முதல்முறை. இது எங்கள் மையத்துக்கே மிகவும் சோகமான நாள்" என்றனர்.

கொல்லப்பட்ட கொரில்லா அழிந்து வரும் உயிரினங்கள் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தின் காணொளி வடிவம்