Last Updated : 23 Mar, 2015 09:21 AM

 

Published : 23 Mar 2015 09:21 AM
Last Updated : 23 Mar 2015 09:21 AM

குரானை எரித்ததாக புகார்: ஆப்கானிஸ்தானில் இளம்பெண் அடித்துக் கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குரானை எரித்ததாக குற்றம் சாட்டி இளம்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. இவர் கடந்த 19-ம் தேதி காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குச் சென்றார். மசூதி வளாகத்தில் இவர் புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்ததாக சிலர் கோஷ மிட்டனர்.

இந்தத் தகவல் தீயாகப் பரவி ஒரு சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மசூதி வளாகத்தில் கூடிவிட்டனர். அங்கிருந்த சில போலீஸார், பாதுகாவலர்கள் மசூதியின் வாயிற்கதவுகளை மூடி பர்குந்தாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி குதித்து மசூதி வளாகத்துக்குள் புகுந்தனர்.

கொலைவெறி கும்பல்

என்ன நடந்தது என்பது குறித்து எதுவுமே விசாரிக்காமல் அந்தப் பெண்ணை தரையோடு தரையாக இழுத்து வந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். சிலர் காலால் எட்டி உதைத்தனர், கற்களை வீசியெறிந்தனர், கம்புகளால் சரமாரியாக அடித்தனர்.

ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த அந்தப் பெண் தலைகுப்புற தரையில் விழுந்தார். ஆனால் அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத சிலர் அந்தப் பெண்ணின் உடல் மீது ஏறி நின்று குதித்தனர். அப்போதே அவரது உயிர் பிரிந்துவிட்டது. ஆனால் அதன் பின்னரும் அந்தப் பெண்ணின் உடலை கொலைவெறி கும்பல் தாக்கிக் கொண்டே இருந்தது.

பின்னர் காபூல் ஆற்றங்கரைக்கு உடலை எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினர். இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் வந்து பாதி எரிந்த நிலையில் பர்குந்தாவின் உடலை மீட்டனர்.

பெண்ணின் தாயார் கதறல்

அப்பெண்ணின் தாயார் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது மகள் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பல்வேறு டாக்டர்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். மனஅமைதிக்காக ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்பாவி பெண்ணை அநியாயமாக கொன்றுவிட்டனர் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த கொடூர கொலை குறித்து காபூல் போலீஸார் விசாரித்து 13 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

உடல் அடக்கம்

ஆப்கானிஸ்தானில் செயல்படும் மனித உரிமை அமைப்புகள், மகளிர் நல அமைப்புகள் இச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அவர்களின் ஏற்பாட்டின்பேரில் காபூலில் நேற்று பர்குந்தாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர். பர்குந்தாவின் உடலை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x