Published : 26 Nov 2016 11:18 AM
Last Updated : 26 Nov 2016 11:18 AM

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 90.

கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன் பாணியில் கம்யூனிஸத்தை ஆதரித்தவர் காஸ்ட்ரோ. புரட்சி மூலம் கியூபாவின் ஆட்சியைப் பிடித்த காஸ்ட்ரோ, கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை கியூபா அதிபராக இருந்தார். சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையும் இவருக்குள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். அதன்பின் அவரது உடல்நிலை வயது பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். இத்தகவலை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தழுதழுத்த குரலில் அறிவித்தார். ரவுல் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு 10.29 மணிக்கு கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமாகி விட்டார்’’ என்றார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் உடல்நலம் குன்றியிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக கியூபாவின் அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்து வந்த பாதை இதுதான்:

1926, ஆகஸ்ட் 13: கிழக்கு கியூபாவில் உள்ள பிரனில் ஸ்பெயின் நிலச்சுவாந்தாருக்கும், கியூபா தாய்க்கும் 3-வது குழந்தையாக பிறந்தார். பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவராக திகழ்ந்தார்.

1953, ஜூலை 26: கியூபாவின் ராணுவப் படைகளுக்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆதரவாளர்களுடன், காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

1956, டிசம்பர் 2: மெக்ஸிகோவில் இருந்து தப்பியதும் 81 போராளிகளுடன் கிரான்மா என்ற கப்பல் மூலம் தென்கிழக்கு கியூபாவுக்கு வந்தடைந்தார். பின்னர் சியாரா மெஸ்டிரா மலைகளில் இருந்தபடி 25 மாதங்கள் ராணுவத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கினார்.

1959, ஜனவரி 1: ராணுவ சர்வாதிகாரி பல்ஜெனிசியோ படிஸ்டா நாட்டை விட்டு தப்பியோடினார். பின்னர் ஜனவரி 8-ம் தேதி காஸ்ட்ரோ வெற்றி உற்சாகத்துடன் நாட்டுக்குள் நுழைந்தார். பிப்ரவரியில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.

1959, ஏப்ரல் 15-27: அமெரிக்காவில் அதிபர் ரிச்சர்டு நிக்ஸனை சந்தித்தார்.

1960: சோவியத் யூனியனுடன் ராஜாங்க ரீதியிலான உறவை நிர்மாணித்தார்.

1961: கியூபாவுடனான ராஜாங்க உறவுகளை அமெரிக்கா முறித்துக் கொண்டது.

1961, ஏப்ரல் 17-19: அமெரிக்க ஆதரவுடன் பே ஆப் பிக்ஸ் பகுதியில் நடந்த படையெடுப்பில் எதிர்ப்பாளர்கள் 1,400 பேரை விரட்டியடித்து வெற்றிப் பெற்றார்.

1962, பிப்ரவரி 13: அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கியூபாவுக்கு எதிராக ஏற்றுமதி தடை விதிக்கும் ஆணை பிறப்பித்தார்.

1962, அக்டோபர்: கியூபாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியது. பின்னர் கியூபா மீது படையெடுப்பு இல்லை என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கியதும், ஏவுகணைகளை சோவியத் யூனியன் வாபஸ் பெற்றது.

1963 ஏப்ரல்: முதல் முறையாக சோவியத் யூனியன் சென்றார் காஸ்ட்ரோ.

1965: கியூபா கம்யூனிச கட்சியை நிறுவினார் காஸ்ட்ரோ.

1990: சோவியத் யூனியன் உடைந்ததால் கியூபா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.

1995: முதல்முறையாக சீனா சென்றார் காஸ்ட்ரோ.

1998: கியூபாவுக்கு வந்த வாடிகன் போப் ஜான் பாலை வரவேற்றார் காஸ்ட்ரோ.

2003, மார்ச்: அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 75 பேரை கைது செய்வதற்கு காஸ்ட்ரோ உத்தரவு பிறப்பித்தார்.

2006, ஜூலை 31: ஆபத்தான குடல் அறுவை சிகிச்சை காரணமாக தனது பதவியை சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 75.

2006, டிசம்பர் 3: உடல் நலக்குறைவு காரணமாக தனது 80-வது பிறந்த தினத்திலும், கிரான்மா கப்பல் மூலம் கியூபா வந்தடைந்த 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்கவில்லை.

2008, பிப்ரவரி: கியூபாவின் அதிபராக ரால் காஸ்ட்ரோ நியமிக்கப்பட்டார்.

2014, டிசம்பர் 17: அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு வருகை தந்து இரு நாட்டுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

2016, நவம்பர் 25: 90 வயதில் காஸ்ட்ரோ காலமானார். கியூபா கண்ணீரில் மூழ்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x