Published : 11 Dec 2013 04:15 PM
Last Updated : 11 Dec 2013 04:15 PM

காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கியது தற்செயலே: அமெரிக்கா

கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தற்செயல் நிகழ்வுதான் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவும் கியூபாவும் அருகில் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இருநாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவுகிறது.

முக்கியமாக கியூபா புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் காஸ்ட்ரோ அதிபரான இரண்டாவது ஆண்டில் (1961) இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான ராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசுவதற்கு முன்பாக ஒபாமா தாமாகவே முன்வந்து கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார். சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்வு, அமெரிக்கர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் மேடையேறி பேசச் செல்லும் வழியில், ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கினார். இது மிகவும் தற்செயலான நிகழ்வுதான். திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல.

ஒபாமா, ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிவிட்டார் என்பதற்காக கியூபா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மாறிவிடும் என்பது அர்த்தமல்ல. இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எதிர்ப்படும் வெளிநாட்டுத் தலைவர்களுடம் கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாறிக் கொள்வதை ஒபாமா ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளார். எனவே, ஒரு சிறிய நிகழ்வை வெவ்வேறு விதமாக வர்ணிப்பது தேவையற்றது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x