Published : 22 Aug 2014 02:45 PM
Last Updated : 22 Aug 2014 02:45 PM

காஸா போரில் 469 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்

காஸாவில் நடந்துவரும் போர்க் கலவரங்களில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ள சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆதரவற்று இருப்பதாகவும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா - இஸ்ரேல் இரு தரப்பிலும் நடந்துவரும் பிரச்சினையில் எகிப்து தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், பேச்சுவார்த்தையின்போது பலமுறை அத்துமீறல்களில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு போர்ச் சூழல் தணியாமல் உள்ளது.

இந்நிலையில், யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், காஸா பிரச்சினையில் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டதாக ஜிங்குவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கடந்த 48 மணி நேரத்தில், 9 குழந்தைகள் கொல்லப்பட்டனர். காஸா பிரச்சினையால் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 469 ஆக உள்ளது. போருக்கு முடிவு ஏற்படாத நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

10 லட்சம் குழந்தைகள் போர்ச் சூழலில் குடும்பங்களை இழந்து ஆதரவின்றி உள்ளனர். நாங்கள் அவர்களிடன் பேசும்போது, அவர்கள் உளவியல் ரீதியாக மிக பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது.

குடும்பத்தினர் சிலரை இழந்த குழந்தைகள், தங்களது மற்ற உறவுகளுடன் பேசக்கூட மறுக்கின்றனர். தொடர்ந்து கொடூர கனவுகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என பல்வேறு வகையில் அவர்களது பயத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெற்றோர்களை, தங்களது பார்வையிலிருந்து நகரவும் அவர்கள் அனுமதிப்பதில்லை. எந்நேரமும் அவர்கள் அதிர்ச்சியான மனநிலையோடு நாட்களை கடக்கின்றனர்" என்று காஸாவில் மனித உரிமை ரீதியிலான உதவிகளை மேற்கொண்டு வரும் ஐ. நா அதிகாரி யுனிசெஃப் கூட்டத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x