Last Updated : 26 May, 2017 11:52 AM

 

Published : 26 May 2017 11:52 AM
Last Updated : 26 May 2017 11:52 AM

என்னை மன்னித்துவிடுங்கள் மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்

மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 22 வயதான சல்மான் அமேதி என்ற இளைஞர்தான் இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியவர் என்று அவரது புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டு அதனை உறுதியும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சல்மான் அமேதி பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளி வந்தவண்ணம் உள்ளன.

லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட அமேதி லண்டனில் வளர்ந்தவர் என்றும் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறியவர் என்று லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய அமேதி குண்டு வெடிப்பை நடத்தும் முன், தொலைபேசியில் 'என்னை மன்னித்து விடுங்கள்' என்று கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமேதியின் உறவினர் கூறும் போது, "சல்மான் அமேதி தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு 'என்னை மன்னிவிடுங்கள்' என்று என்னிடம் கூறினார். கடந்த ஆண்டு லண்டனில் அமேதியின் முஸ்லிம் நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்டத்தை பற்றி யாரும் கவனிக்கவில்லை என்று அமேதி வருத்தப்பட்டார். லண்டனில் அரேபியர்கள் கொலை செய்யப்படுவது குறித்து ஏன் இங்கு எந்த சீற்றமும் இல்லை. இதுதான் இந்தத் தாக்குதல் ஏற்பட காரணமாகியுள்ளது" என்றார்.

தற்கொலைப் படை தீவிரவாதி சல்மான் அமேதி, ரமதான் அமேதி, லிபியா தலைநகர் திரிபோலியில் வசித்து வருகிறார். அவரை அந்த நாட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சல்மான் அபேதியின் சகோதரர் இஸ்மாயில் தெற்கு மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார். அவரும் மான்செஸ்டர் போலீஸ் பிடியில் உள்ளார்.

இதனிடையே மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை விவரங்களை இங்கிலாந்து போலீஸார் அமெரிக்க உளவுத் துறையிடம் பகிர்ந்து வந்தனர். அந்த விவரங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இங்கிலாந்து போலீஸார் இனிமேல் விசாரணை விவரங்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை மான்செஸ்டர் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x