Last Updated : 18 May, 2017 03:25 PM

 

Published : 18 May 2017 03:25 PM
Last Updated : 18 May 2017 03:25 PM

என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட அரசியல் தலைவர் எவரும் இல்லை: ட்ரம்ப் வேதனை

அரசியல் வரலாற்றில் ஊடகத்தால் என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவரின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் அமெரிக்க ஊடகங்களிடமிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் உதவினார் என்றும், ஐஎஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ரஷ்யாவுக்கு ட்ரம்ப் வழங்கினார் என்றும் போன்ற பல குற்றஞ்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்துள்ளன. ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அவரது கட்சியிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆனால் தன் மீதான அனைத்து குற்றஞ்சாட்டுகளையும் ட்ரம்ப் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க கடலோர காவல்படை வீரர்களின் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்று பேசும்போது, "சமீபகாலமாக என்னை ஊடகங்கள் நடத்தும் முறையைப் பாருங்கள். வரலாற்றில் என்னைவிட மோசமாக நடத்தப்பட்ட அரசியல் தலைவர் எவரும் இல்லை. ஆனால் இதனால்தான் நான் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் நெருக்கடிகள்தான் நம்மை வலுவடையச் செய்கின்றன. நீங்கள் எடுத்த முயற்சியிலிருந்து பின் வாங்காதீர்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை யார் தடுத்தாலும் நிறுத்தாதீர்கள்.

நான் அதிபராக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன்.

மதிப்பு கூடிய எதுவும் எளிதாக கிடைத்துவிடாது. அதற்கு நீங்கள் சண்டையிட வேண்டும், தொடர்ந்து சண்டையிடுங்கள். தளர்ந்துவிடாதீர்கள்.

நான் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களுக்காக அல்ல" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x