Last Updated : 11 Aug, 2015 07:01 PM

 

Published : 11 Aug 2015 07:01 PM
Last Updated : 11 Aug 2015 07:01 PM

எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?

ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும்.

உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும்.

டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், சாத்தியமான எண்கூட்டை அமைக்க ஒரு நிரல் எழுதினார். அதில் கிடைத்த எண்களை அனைத்தையும், ஃபேஸ்புக் நிரலி உருவாக்க மென்பொருளுக்கு அனுப்பினார். உடனே ஆயிரக்கணக்கான தனிநபர்களின் சுய விவரங்கள் தடையில்லாமல் வந்து குவிந்திருக்கின்றன.

இது குறித்து மொயாண்டின் மேலும் கூறியதாவது

இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கூட, பொதுவெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றியிருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடமுடியும்; பின்னர் அதையே மற்ற நிறுவனங்களுக்கு விற்கவும் முடியும்.

கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கிடம் இப்பாதுகாப்புப் பிரச்சனை குறித்துத் தெரிவித்த பின்னரும், அந்த ஓட்டைகள் அடைக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்ச ஃபேஸ்புக் பயனாளிகள், தங்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், என்று கூறினார்.

சென்ற வருடத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, ராண்ட் கார்ப்பரேஷனின் தேசிய பாதுகாப்பு பிரிவு சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தனிநபர்களின் புகைப்படங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள், கல்வித் தகவல் மற்றும் வசிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் இருக்கும் சட்டவிரோதமான வணிக தளங்களால் திருடப்படுகின்றன.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் அதிகம் உபயோகமானவை என்கிறது ராண்ட் நிறுவன ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x