Published : 18 Sep 2016 10:09 AM
Last Updated : 18 Sep 2016 10:09 AM

உலக மாசலா: அட! சின்னப் பையனுக்குள் எவ்வளவு பெரிய மனம்!

ப்பான் பாம் பாம் என்ற சியர்லீடிங் குழுவில் 28 பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 55 80 வயது முதியவர்கள். தோற்றத்திலோ, உற்சாகத்திலோ முதுமையை வெளிக்காட்டாமல், கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறார்கள். 84 வயதான ஃபுமி டானகோதான் ஜப்பான் பாம் பாம் குழுவை உருவாக்கியவர். ‘என் இளமைப் பருவத்தில் சியர்லீடிங் குறித்து எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனால் காலம் முதுமையில் அதைச் செய்ய வைத்துவிட்டது. 53 வயதில் டெக்சாஸ் சென்று படிக்க விரும்பினேன். என் அம்மா உட்பட பலரும் என்னை எதிர்த்தனர். ஆனால் குழந்தைகள் என்னை ஆதரித்தனர். 60 வயதில் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த நேரம் வெறுமையை உணர்ந்தேன். அதிலிருந்து மீள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தேன். சியர்லீடிங்கைத் தேர்ந்தெடுத்தேன். என்னைப் போல 5 பெண்களைச் சேர்த்துக்கொண்டு, சியர்லீடிங்கை ஆரம்பித்து விட்டேன். இருபது ஆண்டுகளைக் கடந்தும் எங்கள் குழு உற்சாகமாக இயங்கி வருகிறது. தற்போது 28 பெண்கள் இருக்கிறார்கள். மிகக் கடினமான விஷயங்களை நாங்கள் செய்வதில்லை. ஆனால் புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. வாரம் ஒருமுறை குழுவினர் சந்தித்து, எங்களை எப்படி முன்னேற்றிக்கொள்வது, வித்தியாசப்படுத்துவது, சுவாரசியம் கூட்டுவது என்று திட்டமிடுகிறோம். அதை உடனே செயல்படுத்தியும் வருகிறோம். 55 வயதானால் மட்டுமே எங்கள் குழுவில் இடம் கிடைக்கும். ஓய்வு பெறுவது அவரவர் விருப்பம்’ என்கிறார் ஃபுமி டானகோ.

தன்னம்பிக்கை பெண்கள்!

மெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசித்து வருகிறான் 10 வயது தாமஸ் மூர். 2 ஆண்டுகளுக்கு முன்பு தன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு வீடியோ பார்த்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தை, கீமோதெரபியால் முடிகளை இழந்திருந்தாள். அம்மாவிடம் விளக்கம் கேட்டான். உடனே முடி வளர்த்து, புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்தான். இரண்டு ஆண்டுகளாக முடியை வளர்த்து, நன்கொடையாக வழங்கிவிட்டான். ‘பெண்கள் நீளமாக முடி வளர்க்க விரும்புவார்கள். அதனால்தான் இவ்வளவு நீளமாக வளர்த்தேன். என்னுடைய முடியை வைத்து 3 செயற்கை முடி அலங்காரத்தை உருவாக்க முடியும். என் மூலம் சிலர் சந்தோஷமடைகிறார்கள் என்றால் அதுவே எனக்குப் போதும். ஆனால் நான் யாருக்காக இந்த முடியை வளர்க்க நினைத்தேனோ அந்தப் பெண் இன்று உயிருடன் இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்கிறான் தாமஸ் மூர். மகனின் செயலை படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார் ஏஞ்சலியா புலோஸ். இதுவரை 55 ஆயிரம் முறை உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

அட! சின்னப் பையனுக்குள் எவ்வளவு பெரிய மனம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x