Published : 01 Sep 2015 11:02 AM
Last Updated : 01 Sep 2015 11:02 AM

உலக மசாலா: 95 வயது இளமை சாமியார்!

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் யோகா குரு காஸிம் குர்பஸ். 50 வயது மதிக்கத்தக்கவராக இருக்கிறார், ஆனால் அவருக்கு 95 வயதாகிவிட்டது. இன்னும் 35 ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொல்கிறார். ‘’நான் சிறிய வயதில் இருந்தே யோகா செய்கிறேன். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன். மனிதனின் ஆயுள் காலம் 130 ஆண்டுகள். 65 வயதில் இருந்துதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. என்னைப் போல் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் யார் வேண்டுமானாலும் 130 வயது வரை வாழலாம்’’ என்கிறார் காஸிம்.

41 வயதில் காஸிமுக்கு மோசமான கார் விபத்து ஏற்பட்டது. அவருடைய முதுகெலும்பு உடைந்து போனது. இனிமேல் காஸிமால் எப்பொழுதும் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். காஸிம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய முதுகெலும்பைச் சரி செய்துவிட்டார். 9 மாதங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார். இந்த 9 மாதங்களில் 63 பரிசோதனைகளைத் தன் உடலில் நிகழ்த்தியிருந்தார். ’’நம் மூளையைச் சரியான விதத்தில் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தசைகளுக்கும் நரம்புகளுக்கும் கட்டளைகளைக் கொடுத்தால் விரைவில் உடல் நலம் பெற்றுவிடும்.

அப்படித்தான் நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன்’’ என்கிறார் காஸிம். ஆனால் மருத்துவ உலகில் இருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் காஸிம். ‘’நான் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறேன். என் உடலைப் பரிசோதித்து நான் ஏமாற்றுகிறேனா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்று கூறி வருகிறார் காஸிம்.

யாரைத்தான் நம்புவதோ…

சீனாவைச் சேர்ந்த லின் ஹான்பிங் வித்தியாசமான கலைஞர். கடந்த 20 ஆண்டுகளாக மீன் எலும்புகளை வைத்து ஓவியங்களை உருவாக்கி வருகிறார். சீனாவில் இருக்கும் ஒரே ஒரு மீன் எலும்பு கலைஞர் இவர்தான்! ‘‘நான் சிறுவனாக இருந்தபோதே மீன் எலும்புகள் என்னைக் கவர ஆரம்பித்துவிட்டன. மீன் எலும்புகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். இன்று மீன் எலும்பு ஓவியங்களுக்கு என்று பிரத்யேகமாக ஓவியக்கூடத்தை ஸியாமென் பகுதியில் வைத்திருக்கிறேன். இங்கே 1000 ஓவியங்கள் இடம்பெற்றிருக் கின்றன’’ என்கிறார் லின்.

மீன்களைச் சாப்பிட்ட பிறகு, எலும்புகளை எடுத்துச் சேகரித்து வந்த லின், இன்று உணவகங்கள், மீன் மார்கெட், மீன் தொழிற்சாலைகளுக்குச் சென்று எலும்புகளைச் சேகரித்து வருகிறார். 10 விதங்களில் எலும்புகளைச் சுத்தம் செய்கிறார். இவருடைய ஓவியங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மரங்களும் பறவைகளும் பறப்பது போல ஓவியம் இருந்தால், சீனாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம் என்கிறார் லின். ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

வித்தியாசமான முயற்சி… நல்ல நோக்கம்…

அலாஸ்காவில் உள்ள கிவலினா நகரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய நிலப்பரப்பை இழந்து வருகிறது. ஒவ்வொரு புயலின்போதும் கிவலினாவின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதாவது நிலப்பகுதி தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. 403 குடும்பங்கள் வசித்து வந்த இந்தப் பகுதியில், பெரும்பாலானோர் வேறு இடங்களில் குடியேறி வருகின்றனர். கிவலினாவில் நிலத்தையோ, வீட்டையோ யாரும் வாங்க முன்வருவதில்லை. கடல் மட்டம் அதிகரிப்பதோடு, நிலப்பகுதியில் கடல் அரிப்பும் இருப்பதால் வேகமாக மறைந்து வருகிறது கிவலினா. 2025-ம் ஆண்டுக்குள் முழுமையாக நீரில் மூழ்கிவிடும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். மக்களின் உணவுத் தேவையை கூட இங்கே பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

இனியாவது சுற்றுச்சூழல் குறித்து உண்மையான அக்கறை காட்டுவார்களா?

தாய்லாந்தில் உள்ள டைகர் வனவிலங்கு பூங்காவில் பார்வை யாளர்களைக் கவர்ந்திழுக்கிறார் ‘தேள் ராணி’. கொடிய விஷம் கொண்ட கருந்தேள்களைச் சட்டையில் மாட்டிக்கொண்டு, பார்வையாளர்களுடன் உரையாடி வருகிறார். தேள்கள் ஊர்ந்து சென்றால், அவற்றை எடுத்து, மீண்டும் சட்டை மீது வைத்துக் கொள்கிறார். தேள் ராணியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதை எல்லோரும் விரும்புகிறார்கள். நூற்றுக்கணக்கான தேள்கள் உடலில் இருந்தாலும் புன்சிரிப்புடன் வலம் வருகிறார் தேள் ராணி.

தைரிய ராணி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x