Published : 02 Jun 2015 11:04 AM
Last Updated : 02 Jun 2015 11:04 AM

உலக மசாலா: 7 ஆண்டுகளில் 200 கடல் பயணங்கள்

புளோரிடாவைச் சேர்ந்த 86 வயது லீ வாச்ஸ்டெல்லர் ஆடம்பரக் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். க்ரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பலில் கடந்த 7 ஆண்டுகளாக அவர் வசித்து வருகிறார். இந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட நிலத்தில் அவர் கால் பதியவில்லை. லீயின் கணவர் கை மசன் வாச்ஸ்டெல்லர் கடல் பயணங்கள் மீது ஆர்வம் உள்ளவர். இவர்களின் 50 ஆண்டு கால மணவாழ்க்கையில் 89 முறை கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கை மசன், “நான் இறந்து போனாலும் கடல் பயணத்தை நீ ஒருபோதும் விட்டுவிடக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

தன்னுடைய பெரிய பங்களாவை விற்றுவிட்டு, கணவரின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக கடல் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் லீ. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 கடல் பயணங்கள் மேற்கொண்டு, நூறு நாடுகளைத் தொட்டிருக்கிறார். இதில் உலகைச் சுற்றி வந்த 15 பயணங்களும் அடங்கும். லீயின் மகன்களும் பேரன் பேத்திகளும் வாய்ப்பிருக்கும் இடங்களில் வந்து, பார்த்துவிட்டுச் செல்கின்றனர். சொகுசுக் கப்பல் அறை வாடகை, உணவு, பொழுதுபோக்கு விஷயங்கள், பார்ட்டிகள் என்று ஆண்டுக்கு சுமார் 1 கோடிக்கு மேல் செலவாகிறது. கப்பலின் உரிமையாளர்களில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் அன்புடன் லீயைக் கவனித்துக்கொள்கிறார்கள். “லீ அற்புதமான பெண்மணி’’ என்று பாராட்டுகிறார்கள்.

80 நாட்களில் உலகைச் சுற்றி வந்த நாவலை எழுதிய ஜுல்ஸ் வெர்ன் கற்பனைக்குக் கூட எட்டாத சாகசக்காரர் லீ!

சீனாவின் ஷாங்காய் நகர் வான்டு செண்டர் வணிக வளாகத்தில் பெண்களுக்கு என்று பிரத்யேக கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. 6 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கார் நிறுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பகுதி என்பதைக் குறிக்கும் சின்னமும் இளம் சிவப்பு வண்ணமும் அந்தப் பகுதியில் தீட்டப்பட்டிருக்கின்றன. கார் பார்க்கிங் பகுதிக்கு அருகிலேயே பெண்களுக்கான ஓய்வறை, கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆண்கள் இந்தப் பகுதியில் கார் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. சமூகத்தில் பெண்களைச் சரியாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தப் பிரத்யேக கார் பார்கிங் வசதி என்கிறார்கள் வணிக வளாகத்தின் உரிமையாளர்கள். தென்கொரியா, ஜெர்மன், சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் ஏற்கெனவே பெண்களுக்கென்று தனி கார் பார்கிங் வசதி செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு பெண்கள் மத்தியில் ஆதரவும் ஆண்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இது என்றும் தீராத பிரச்சினைதான்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x