Published : 04 Jun 2015 10:00 AM
Last Updated : 04 Jun 2015 10:00 AM

உலக மசாலா: 7 அடி நீள மீன்

நார்வேயில் உள்ள லோஃபோடன் தீவுகளில் எரிக் ஆக்ஸ்னரும் அவரது நண்பர்களும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு எரிக்கின் தூண்டிலில் ஒரு மீன் மாட்டியது தெரிந்தது. ஆனால் எவ்வளவு போராடியும் அவரால் அதை இழுக்க முடியவில்லை. சிலரை உதவிக்கு அழைத்து தூண்டிலை இழுத்தார். 7 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட ராட்சச ஆங்கிலர் மீன் ஒன்று தூண்டிலில் சிக்கியிருந்தது. மீனை கயிற்றில் கட்டி, படகில் இணைத்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்தனர். பிறகு மீண்டும் கடலுக்குள்ளே விட்டுவிட்டனர். ஆழ்கடலில் வசிப்பதால் ஆங்கிலர் மீன்கள் கண்கவர் வண்ணங்களிலோ, உருவ அமைப்புகளிலோ இருப்பதில்லை.

நல்லவேளை… மறுபடியும் கடலில் விட்டதற்கு நன்றி எரிக்!

சீனாவில் நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களில் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. ஆடம்பர அறைகள், விதவிதமான உணவுகள், சொகுசு கார்கள், நீச்சல் குளம், விளையாட்டுகள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து, அனுபவிக்கிறார்கள் குழந்தைகள். இப்படி சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், நன்றாகப் படித்து, பெரிய வேலைக்குச் சென்றால்தான் முடியும் என்று பெற்றோர்கள் புரிய வைக்கிறார்கள். இப்படி வரும் குழந்தைகளில் பலர் அதிகமான ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே பணம் பணம் என்று அவர்கள் மனநிலையை மாற்றக்கூடாது என்று பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இந்த விஷயம் இணையத்தில் பரவி, அதிகமான பெற்றோர்களை சொகுசு விடுதி நோக்கி நகர்த்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள்?

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள க்ரோகெர் பல்பொருள் அங்காடியில் புத்தம் புதிய காளான்களை நாமே பறித்துக்கொள்ளலாம். காளான்களைப் பறித்து, பாக்கெட்களில் விற்கும்போது வாடிக்கையாளர்களுக்கு அவை புதிய காளான்கள்தானா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. காளான்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் சமைத்தால்தான் நல்லது என்பதால், கடையிலேயே விதவிதமான காளான்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான காளான்களை நாமே பறித்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் அதிகமான வாடிக்கையாளர்களை இங்கே வரவைத்திருகிறது.

அட! பறிச்ச உடனேயே சமைச்சிடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x