Published : 16 Dec 2015 10:14 AM
Last Updated : 16 Dec 2015 10:14 AM

உலக மசாலா: 67 லட்ச ரூபாய் போனஸ்

டெக்சாஸில் இயங்கி வருகிறது ஹில்கார்ப் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம். தன்னுடைய ஊழியர்களுக்கு இதுவரை உலகில் யாரும் செய்யாத அரிய விஷயத்தைச் செய்திருக்கிறது. சிஇஓ ஜெஃப் ஹில்ட்பிராண்ட், நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் 67 லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்திருக்கிறார்! இங்கே 1,381 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ’’எங்கள் சிஇஓதான் உண்மையான சாண்டா க்ளாஸ். இதுவரை கிறிஸ்துமஸ் பரிசாக இவ்வளவு பெரிய தொகையை யாரும் பெற்றிருக்க மாட்டார்கள்.

5 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் இரண்டு மடங்காக மாற்றினால், நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு போனஸ் தருவோம் என்றார்கள். 5 ஆண்டுகளின் முடிவில் எங்கள் நிறுவனம் இலக்கை எட்டிவிட்டது. சொன்னது போலவே ஊழியர்களுக்கு கனவிலும் எதிர்பார்க்காத தொகையை போனஸாக வழங்கிவிட்டார்கள். அறிவிப்பு வந்தவுடன் எங்களால் நம்பவே இயலவில்லை. எல்லோருமே கண்ணீர்விட்டு அழுதோம். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டோம். பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு விஷயம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது! போனஸ் ஏதாவது கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் வாழ்நாளுக்குமான ஒரு தொகை போனஸாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’’ என்கிறார் ஊழியர் அமண்டா. ஃபார்சூன் வெளியிட்டுள்ள 100 சிறந்த நிறுவனங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பிடித்து இருக்கிறது ஹில்கார்ப்.

2010-ம் ஆண்டு கார்களை ஊழியர்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. சில ஊழியர்கள் வாழ்நாளுக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டதால், விருப்ப ஓய்வில் செல்லும் திட்டத்தில் இருக்கின்றனர். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இன்னும் சிலர் உலக சுற்றுலா செல்ல காத்திருக்கின்றனர்.

அடடா! நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் லி ஹைலிங், முடி திருத்துனர். தினமும் முடி வெட்டிய பிறகு, வெட்டப்பட்ட முடிகளைத் தனியாகச் சேகரித்து வைப்பார். ஓய்வு நேரங்களில் முடிகளை வைத்து, பிரபலமானவர்களை ஓவியங்களாகத் தீட்டி விடுவார். ‘’மணல் ஓவியங்களில் இருந்துதான் எனக்கு இந்த யோசனை உதித்தது. கேன்வாஸில் அவுட் லைன் வரைந்துகொண்டு முடிகளை அப்படியே தூவி விடுவேன். பசைகளை வைத்து முடிகளை ஒட்ட மாட்டேன்.

ஒவ்வொரு ஓவியத்தையும் போட்டோ எடுத்துக்கொள்வேன். ஒரு ஓவியத்துக்கு 2 மணி நேரம் ஆகும். இந்த ஓவியங்கள் அதிகக் காலம் உழைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஓவியங்களைக் குப்பையில் போட்டுவிடுவேன். புது ஓவியம் வரைய ஆரம்பித்துவிடுவேன். மிகக் குட்டையான முடிகளாக இருந்தால்தான் ஓவியம் நன்றாக வரும்’’ என்கிறார் லி. உலகிலேயே மனித முடிகளை வைத்து ஓவியம் தீட்டும் ஒரே கலைஞர் லி ஹைலியாங்தான்!

கற்பனையும் உழைப்பும் இருந்தால் எதிலும் சாதிக்கலாம்!

இங்கிலாந்தில் வசிக்கும் எமி பூல், கடந்த ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையின் மூக்கில் கோல்ஃப் பந்து அளவுக்கு ஒரு கட்டி இருந்தது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அது கட்டி அல்ல மூளை என்பது தெரியவந்தது. மிக அரிய குறைபாடு இது. மண்டை ஓடு திறந்திருந்தால், உள்ளிருக்கும் மூளை பின் மண்டை, மூக்கு போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிடும்.

சிறுவன் ஆலீ ட்ரெஸைஸ் பிறந்து 21 மாதங்களாகின்றன. அதற்குள் வலி நிறைந்த, ஆபத்தான பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இவற்றின் மூலம் மூளை மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுவிட்டது. நன்றாக மூச்சு விட முடிகிறது. ’’குழந்தை பிறந்தவுடன் நான் பயந்தே போய்விட்டேன். காரணம் தெரிந்தபோது உடைந்துவிட்டேன். மனதைத் தேற்றிக்கொண்டு, குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினோம். இதோ ஆலீ பல ஆபத்துகளைக் கடந்து ஆரோக்கியமாக இருக்கிறான்.

கதையில் நான் படித்த பினாஹியோ, எனக்கே மகனாகப் பிறப்பான் என்று எதிர்பார்க்கவில்லை! இந்த மகனுக்கு அம்மாவாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார் எமி பூல்.

கஷ்டத்தையும் எவ்வளவு அழகாகக் கையாள்கிறார் எமி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x