Published : 01 Dec 2016 10:34 AM
Last Updated : 01 Dec 2016 10:34 AM

உலக மசாலா: 5 நட்சத்திரக் கழிப்பறை!

தூய்மை குறைபாடும் துர்நாற்றமும் அச்சுறுத்துவதால் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதற்குப் பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சீனாவின் சோங்க்விங் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 5 நட்சத்திர பொதுக் கழிப்பறையை இதில் சேர்க்க முடியாது. 150 சதுர மீட்டரில் இந்தக் கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது. மார்பிள் தரை, கிரானைட் சுவர், மரத்தால் ஆன கதவுகள், அலங்கார விளக்குகள், குளிர் சாதன வசதி என்று பிரமிக்க வைக்கின்றன.

அழகான ஓவியங்களும் செடிகளும் மென்மையான இசையும் சூழலை ரம்மியமாக்குகின்றன. முன்புறச் சுவர்கள் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளிருந்து வெளியே நடப்பவற்றைக் கவனிக்கலாம். வெளியிலிருந்து உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடியாது. பகல் நேரங்களில் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சம் உள்ளே வரவைப்பதற்காகவும் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துவதற்காகவும் இந்தக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய கழிப்பறை, மிகவும் அக்கறையாகப் பராமரிக்கப்படுகிறது. முதல் முறை இந்தக் கழிப்பறைக்கு வருகிறவர்கள், 5 நட்சத்திர விடுதிக்குள் நுழைந்துவிட்டோமோ என்று பிரமிக்கிறார்கள். 80 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறது.

இந்த 5 நட்சத்திரக் கழிப்பறையில் கட்டணம் எவ்வளவாக இருக்கும்?

ஆஸ்திரேலியாவில் உள்ள மயூரா கால்நடைப் பண்ணையில் மாடுகளுக்கு சாக்லெட்களைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக சாக்லெட் சாப்பிட்டு வளரும் மாடுகளின் இறைச்சி அற்புதமான சுவையில் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். ‘‘உலகம் முழுவதும் வித்தியாசமாக இயங்கக்கூடிய கால்நடைப் பண்ணைகளுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தேன். ஜப்பானில் 2 ஆண்டுகள் தங்கி, கால்நடை நிபுணருடன் சேர்ந்து பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துப் பார்த்தேன். இறுதியில் மாடுகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான உணவுகளுடன் சாக்லெட், மிட்டாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சேர்த்துக் கொடுத்தோம்.

ஒவ்வொரு மாடும் தினமும் 2 கிலோ சாக்லெட் கலந்த உணவுகளைச் சாப்பிட்டன. இதற்காக கேட்பரி நிறுவனத்திடமிருந்து உடைந்த சாக்லெட்களை வாங்கினோம். இன்று எங்கள் பண்ணையில் உலகின் மிகச் சுவையான மாட்டு இறைச்சி கிடைக்கிறது” என்கிறார் மயூரா பண்ணையின் உரிமையாளர் ஸ்காட் டி ப்ருயின். “எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வாரத்துக்கு மூன்று முறை எங்கள் உணவகத்தில் மயூரா மாட்டு இறைச்சியைச் சுவைத்துவிட்டுச் செல்கிறார்கள். சத்து, கொழுப்பு, சுவை அனைத்தும் மிகச் சரிவிகிதத்தில் இந்த இறைச்சியில் இருக்கின்றன’’ என்கிறார் மிசெலின் உணவகத்தின் சமையல் கலை வல்லுனர் உபெர்டோ பாம்பனா. மாடுகளுக்கு இயற்கையான உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும்.

மனிதர்களின் சுயநலத்துக்காக சாக்லெட்களைக் கொடுப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் விமர்சனங்கள் வருகின்றன. ‘சாக்லெட் சாப்பிடுவதால் மாடுகளுக்குக் கெடுதல் வருவதில்லை என்பதை உறுதி செய்த பிறகே, கொடுக்க ஆரம்பித்தோம்’ என்கிறார் மயூரா பண்ணையின் மேலாளர். 1 துண்டு மயூரா மாட்டு இறைச்சி, 20 ஆயிரம் ரூபாய். ஒருமுறை சுவைத்துவிட்டால், பிறகு யாரும் விலையைப் பற்றிப் புகார் அளிப்பதில்லை என்கிறார்கள்.

சாக்லெட் சுவைக்கும் மாடுகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x