Published : 15 Mar 2017 11:02 AM
Last Updated : 15 Mar 2017 11:02 AM

உலக மசாலா: 30 குழந்தைகளுக்குத் தாயான பெண் துறவி!

புத்த மதத்தைச் சேர்ந்த சாங்மியாவோ, சீனாவின் நிங்டு பகுதியிலிருக்கும் ஹைலியன் புத்த மடாலயத்தில் மூத்த பெண் துறவியாக இருக்கிறார். கடந்த 37 ஆண்டுகளில் 30 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். 15 வயதில் துறவு பூண்ட சாங்மியாவோ, 1980-ம் ஆண்டு புத்த ஆலயத்தின் வாயிலில் ஒரு பெண் குழந்தை ஆதரவின்றி தரையில் கிடந்ததைப் பார்த்தார். எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்த குழந்தைக்கு உதவ ஒருவரும் முன்வரவில்லை. குழந்தைக்குச் சிகிச்சையளித்தார். பிறகு தன் மகளாக தத்தெடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு மடாலயத்தின் வாயிலிலும் அருகில் உள்ள ஆலயத்திலும் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளை வரிசையாகத் தத்தெடுத்து, வளர்த்தார். இதைக் கேள்விப்பட்டுச் சிலர் தங்களின் நோய்வாய்ப்பட்ட, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வாயிலில் போட்டுவிட்டுச் சென்றனர். 37 ஆண்டுகளில் 30 பெண் குழந்தைகளுக்கு அம்மாவானார் சாங்மியாவோ. அனைவரையும் அவர்கள் விரும்பியபடி நன்றாகப் படிக்க வைத்தார். சொந்தக் காலில் நிற்க வைத்தார். அதேசமயம் அவர்களுக்கு எளிமையாக வாழும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார். மிகச் சிறப்பாகப் படித்த குழந்தைகள், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றனர். சில குழந்தைகள் தங்கள் அம்மாவைப் போல புத்த துறவியாக மாறினர். 30 குழந்தைகளில் 20 குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டனர். 10 குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். “30 பேரும் என் மகள்கள் என்பதால், என்னுடனேயே தங்க வைத்துக்கொண்டேன். ஒரு காப்பகம் ஆரம்பித்திருந்தால் இன்னும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. விரைவில் ஒரு காப்பகம் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது. பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். பெற்ற குழந்தைகளை ஒருநாளும் பாலினம், நோய் போன்ற காரணங்களால் கைவிடாதீர்கள். அது போன்ற ஒரு துயரம் எதுவும் இல்லை” என்கிறார் சாங்மியாவோ.

30 குழந்தைகளுக்குத் தாயான பெண் துறவி!

மாலத்தீவைச் சுற்றிப் பார்க்க ஆண்டுக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அங்கே தினமும் சேரும் டன் கணக்கான குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை. தலைநகர் மாலேவிலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது திலாஃபுஷி தீவு. 1991-ம் ஆண்டு முதல் இது குப்பை கொட்டக்கூடிய தீவாக மாறிவிட்டது. தினமும் 33 ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கிருந்து கடல் அலைகளால் அரிக்கப்படும் குப்பைகள் மாலே கடற்கரைகளில் கரை சேர்கின்றன. சில பெரிய நிறுவனங்களின் கிடங்குகளும் வங்கதேசத்தைச் சேர்ந்த 150 தொழிலாளர்களுக்கான தங்கும் இடங்களும் இங்கே அமைந்துள்ளன. குப்பைகளை எடுத்துச் செல்பவர்களின் பொறுமையின்மையால் முறையாகக் குப்பைகளைக் கொண்டு செல்வதில்லை. இதனால் போகும் வழியிலேயே கடலுக்குள் குப்பைகள் விழுந்துவிடுகின்றன. குப்பை மேலாண்மை அரசாங்கத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துவருகிறது. 2011-ம் ஆண்டு முதல் குப்பைகளைக் கொட்டுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

குப்பைகளின் நாடா இந்தியா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x