Published : 10 Nov 2015 01:19 PM
Last Updated : 10 Nov 2015 01:19 PM

உலக மசாலா: 3 ஆண்டுகளாகத் தண்ணீர் அருந்தாத மனிதன்!

நாம் உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் அவசியம். ஆனால் பீட்டர் ஃபிலாக் கடந்த 3 ஆண்டுகளாகத் தண்ணீரோ, வேறு திரவங்களோ பருகாமல் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே தனக்குத் தேவையான நீர்ச் சத்தைப் பெற்றுக்கொள்கிறார். ’’ஆரம்பத்தில் எனக்கும் தண்ணீர் இல்லாமல் நாட்களைக் கடத்துவது கடினமாகத்தான் இருந்தது. தண்ணீரை விட்ட சில நாட்களுக்கு சோடா, சாக்லேட் மில்க் போன்றவற்றைக் குடித்துச் சமாளித்தேன். மிக விரைவிலேயே அனைத்தையும் விட்டுவிடக்கூடிய அளவுக்கு மாறிவிட்டேன்.

2012 மே மாதம் 5-ம் தேதிதான் கடைசியாகத் திரவத்தை உட்கொண்டேன். தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்காக குளோரினும் ஃப்ளூரைடும் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரை வடிகட்டினாலும் காய்ச்சினாலும் இந்த வேதிப் பொருட்களில் இருந்து தப்பிக்க இயலாது. அதனால்தான் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தண்ணீரை நான் குடிப்பதில்லை என்று முடிவு செய்தேன். சின்ன வயதில் மது அருந்துவதில்லை என்று முடிவு எடுத்தேன். பிறகு மாமிசம் சாப்பிடுவதில்லை என்று உறுதி எடுத்தேன். இன்று விகன் உணவு மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய உணவுப் பழக்கத்தைப் பார்த்து என் பெற்றோர்கள் அதிர்ந்து போனார்கள்.

இன்று அவர்களும் விகன் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். ஆனால் தண்ணீர் பருகுகிறார்கள். ஒரு நாளைக்கு 800 முதல் 1000 கலோரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்து பெற்றுக்கொள்கிறேன். என் உணவுப் பழக்கத்துக்குச் சமையலறையே தேவை இல்லை.

என் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை. 26 வயதான நான் என் உணவுப் பழக்கம் மற்றும் தண்ணீர் பருகாததன் மூலம் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்று நம்புகிறேன். மற்றவர்களும் இதைத் தொடரவேண்டும் என்று சொல்ல மாட்டேன்’’ என்கிறார் பீட்டர். ஆனால் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியர் லிசா சாஸ்ஸன், ‘’உடலுக்குத் தண்ணீர்ச் சத்து இன்றியமையாதது. தண்ணீரில் இருக்கும் ஃப்ளூரைட் பற்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம். சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் நன்றாக இயங்க தண்ணீர்ச் சத்து முக்கியம்’’ என்கிறார்.

150 வருட ஆயுளா! போர் அடிச்சிடாதா பீட்டர்?

சீனாவில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் அழகான பொம்மையைத் திருமணம் செய்திருக்கிறார். இளைஞருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் சில காலமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். தான் இறப்பதற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, வாழ்க்கையை வீணாக்க அவர் விரும்பவில்லை. அதனால் ஓர் அழகான பொம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். நிஜத் திருமணத்துக்குத் தேவைப்படும் விலையுயர்ந்த ஆடைகள், அலங்காரங்கள், பாரம்பரிய முறைப்படித் திருமணம், விருந்து என்று அத்தனையும் ஆசை தீர செய்துகொண்டார். அட்டகாசமாகப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

அடப் பாவமே…

ப்ளோரிடாவில் வசிக்கும் 65 வயது ரிங்கிள்ஸ், கோமாளி வேஷம் போடுவதைத் தொழிலாகச் செய்து வருகிறார். பிறந்தநாள், திருமண நாள், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களில் கோமாளி வேடமிட்டு, எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். ஒரு விழாவில் கொஞ்சம் பயம் வருவது போல வேடமிடச் சொன்னார்கள். முகம் முழுவதும் வெள்ளை, கண்கள் இரண்டும் கறுப்பு, வாயும் மூக்கும் சிவப்பு என்று அச்சம் தரும் தோற்றத்தில் சென்றார். அன்றிலிருந்து பிடிவாதம் செய்யக்கூடிய குழந்தைகளிடம், அவரைக் காட்டி மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் பெற்றோர்கள்.

இப்பொழுது ரிங்கிள்ஸுக்குத் தொழில் மிகச் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. பூதம் போல் வேடமணிந்து, குழந்தைகளை லேசாக மிரட்டிவிட்டு வருகிறார். ‘’என் 12 வயது மகன் சொல் பேச்சு கேட்கவே மாட்டான். ரிங்கிள்ஸ் வந்து சென்ற பிறகு, அவன் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தேவைப்பட்டால் மீண்டும் ரிங்கிள்ஸை அழைப்பேன்’’ என்கிறார் ஓர் அம்மா. ’’நான் அதிகம் பயமுறுத்த மாட்டேன். ஆனாலும் என் வேடத்தைப் பார்த்த உடனேயே குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். அம்மா, அப்பா சொல்வதைக் கேள், விஷமம் செய்யக்கூடாது, குறும்பு செய்யக்கூடாது, நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வதோடு என் வேலை முடிந்துவிடும். பெற்றோர்கள் நிம்மதியடைகிறார்கள். குழந்தைகள் நல்ல பெயர் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் நிறைவாகவே இருக்கிறது இந்தப் பயமுறுத்தும் வேலை’’ என்கிறார் ரிங்கிள்ஸ்.

சே... இந்த வயதிலுமா பூச்சாண்டி காட்டி, குழந்தைகளை மிரட்டுவது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x