Published : 07 Feb 2017 10:03 AM
Last Updated : 07 Feb 2017 10:03 AM

உலக மசாலா: 18 வயதில் பல்கலை., பேராசிரியார்

மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ 18 வயதில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரிய ராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்! ஹாங்காங்கில் பிறந்த மார்ச் டியான், 2007-ம் ஆண்டு உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். 9 வயதில் கணிதத்தில் A, புள்ளியியலில் B நிலைகளைக் கடந்து General Certificate of Education படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். சாதாரண மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுத் தேர்வுகளையே எழுதுவார்கள். அதே ஆண்டு ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 4 ஆண்டுகளில் முதுகலை படிப்புடன் வெளியே வந்தார். அமெரிக்கா சென்ற மார்ச், சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் வேலையைப் பெற்றிருக்கிறார். மார்ச்சின் ரத்தத்திலேயே மேதமை கலந்திருக்கிறது. இவரது அண்ணன் ஹொராசியோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 14 வயதில் நுழைந்தார்! இவரது அப்பா ஆரம்பக் கல்வி பயிலும் வயதிலேயே உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார்! “என்னை மேதை என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. நான் எந்தக் கஷ்டமும்படாமல் இயல்பாகவே படித்து முடித்திருக்கிறேன். என் பெற்றோரும் ஆசிரியர்களும் என் குழந்தைத் பருவத்தைச் சிதைத்து, மேதையாக்கியிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். என் குழந்தைப் பருவம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கினாலும் நான் இதே பாதையில்தான் பயணிப்பேன்” என்கிறார் மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ.

அடுத்த தலைமுறையில் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே பள்ளிப் படிப்பை முடித்துவிடுவார்களோ!

யானையின் தந்தங்களால் செய்யப்படும் பொருட்களின் விற்பனையைத் தடை செய்திருக்கிறது பிரிட்டன். கடந்த செப்டம்பர் மாதத்திலேயே 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்திருந்தது. தற்போது முழுமையாகத் தடையைக் கொண்டுவந்திருக்கிறது. யானைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும் சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடுபவர்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. கடத்தல்காரர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் எளிதில் உடைத்து, தந்தங்களின் விற்பனையைத் தடையில்லாமல் மேற்கொண்டுவருகிறார்கள். 70 ஆண்டுகளுக்குக் குறைவான தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதித்தபோது, புதிய தந்தங்களைப் பழைய தந்தங்கள் போல மாற்றி, சான்றிதழும் பெற்றுவிடுகிறார்கள். அதனால் முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தந்தங்களால் ஆன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உலக வனவிலங்குகள் நிதியகம் வலியுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது 3,50,000 யானைகளே எஞ்சியிருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஓர் ஆப்பிரிக்க யானை கொல்லப்படுகிறது. உலகின் சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது யானைத் தந்தம். சட்டப்பூர்வமாகவும் சட்டத்துக்குப் புறம்பாகவும் மிகப் பெரிய தந்தம் வர்த்தகம் நடைபெற்று வரும் சீனாவில், இந்த ஆண்டு இறுதிக்குள் தடை கொண்டு வரப்பட இருக்கிறது. அமெரிக்காவும் முழுமையான தடையைக் கொண்டு வர இருக்கிறது.

மற்ற நாடுகளும் தந்தங்களுக்குத் தடை விதித்தால், யானைகளைக் காப்பாற்றலாம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x