Published : 07 Apr 2015 11:06 AM
Last Updated : 07 Apr 2015 11:06 AM

உலக மசாலா: 18 ஆண்டுகளாகக் குழந்தையைத் தேடும் அப்பா!

சீனாவில் வசிக்கும் 45 வயது குவோ கன்டங், கடந்த 18 ஆண்டுகளாக தன் மகனைத் தேடி அலைகிறார். 1997-ம் ஆண்டு 2 வயது குழந்தையாக இருந்த குவோ ஸென், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது நடுத்தர வயது பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்று ஆரம்பித்த தன் தேடுதல் வேட்டையை 18 ஆண்டுகள் ஆகியும் குவோ நிறுத்தவில்லை.

இதுவரை 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று வந்துவிட்டார். மோட்டார் சைக்கி ளின் இருபுறமும் குழந்தையின் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட கொடிகளுடன் பயணிக்கிறார். இதுவரை 10 மோட்டார் சைக்கிள் களை மாற்றியுள்ளார். மகனைத் தேடுவதிலேயே வாழ்க்கைக் கழிவதால், போதுமான வருமானமும் இல்லை. சில நேரங்களில் சாப்பிடக்கூட வழியில்லாமல் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

ஒவ்வொரு நாளும் பயணத்தைத் தொடங்கும்போது, ’இன்று என் கிடைத்துவிடுவான்’ என்று நினைத்துக்கொண்டே கிளம்புகிறார். மாலையில் சோர்வாகத் திரும்பும்பொழுதும், ’நாளை கண்டிப்பாகக் கிடைத்துவிடுவான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். காணாமல் போன எத்தனையோ குழந்தைகள் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்த செய்திகளும், சில நல்ல மனிதர்கள் இதுபோன்ற குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் தகவல்களும் குவோவை உற்சாகத்துடன் இயங்க வைக்கின்றன.

குவோ குடும்பத்தினர் இதுவரை தங்கள் குடும்பப் புகைப்படம் எடுத்ததில்லை. குவோ ஜெஸ் வந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள். குழந்தை காணாமல் போன பொழுது குவோவின் பழைய வீடு, கொஞ்சம் மாற்றிக் கட்டப்பட்டது. ஒருவேளை குழந்தையால் தன் வீட்டை அடையாளம் காண முடியாமல் போய்விட்டதோ என்று கவலைப்படுகிறார் குவோ.

கிரேட் அப்பா!

உலகிலேயே மிகப் பெரிய முயல் என்ற பட்டம் இங்கிலாந்தில் வசிக்கும் டாரியஸ் முயலுக்குக் கிடைத்திருக்கிறது. 4 அடி 4 அங்குல நீளமும் 22 கிலோ எடையும் கொண்ட ராட்சத முயலாகக் காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 2 ஆயிரம் கேரட்கள், 700 ஆப்பிள்கள் கொடுப்பதாகச் சொல்கிறார் டாரியஸின் உரிமையாளர் அன்னெட் எட்வர்ட்ஸ். டாரியஸின் மகன் ஜெஃப் பிறந்த 6 மாதங்களிலேயே 3 அடி 8 அங்குல நீளம் வளர்ந்திருக்கிறது.

மிக விரைவிலேயே டாரியஸ், தன் மகனிடம் பட்டத்தை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. மகன் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் ஜெஃப்பை டாரியஸ் ஒரு குழந்தையைப் போலவே நடத்துகிறது என்கிறார் அன்னெட். ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் டாரியஸ் உணவுக்காகச் செலவு செய்யப்படுகிறது. பகல் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் இரண்டு முயல்களும் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறது!

கலிஃபோர்னியாவில் வசிக்கிறார் மெர்ரி கூர். இவர் பிரத்யேகமான நகைகளை உருவாக்கித் தருகிறார். அதாவது இறந்தவர்களின் சாம்பலை வைத்து, அழகான நகைகளைச் செய்து தருகிறார். அன்பானவர்கள் நம்மை விட்டுச் செல்வது உச்சபட்ச துயரம். அவர்களின் நினைவாக, அவர்களின் சாம்பலை வைத்து உருவாக்கப்படும் நகைகளை எப்பொழுதும் கழுத்தில் அணிந்துகொள்ளலாம். அவர்கள் நம்முடனே வசிப்பது போன்ற திருப்தி கிடைக்கும் என்கிறார் மெர்ரி. வாடிக்கையாளர்களிடமிருந்து சாம்பல் வந்தவுடன், தன் வேலையை ஆரம்பித்து விடுகிறார்.

வண்ண மயமான கண்ணாடி குண்டுகளுக்குள் சாம்பலை வைத்து மூடி விடுகிறார். அழகான டாலர் உருவாகி விடுகிறது. இந்த டாலரை செயினில் கோத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். டாலர் செயின், மோதிரம், தோடு என்று எந்த விதமான நகை கேட்டாலும் செய்து தருகிறார். ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்பல் நகைகளை உருவாக்கித் தருகிறார் மெர்ரி. நகைகளைப் பார்த்தவுடன் கண்ணீர் வடித்து, நன்றி சொல்லிவிட்டு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைப் பார்க்கும்போது திருப்தி ஏற்படுவதாகச் சொல்கிறார் மெர்ரி.

அன்பு லாஜிக் பார்ப்பதில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x