Published : 29 May 2015 10:35 AM
Last Updated : 29 May 2015 10:35 AM

உலக மசாலா: 16 வருடங்களாக தினமும் செல்ஃபி!

அலாஸ்காவைச் சேர்ந்தவர் ஜொனாதன் கெல்லர். கடந்த 16 ஆண்டுகளாகத் தினமும் தன்னைப் புகைப்படங்கள் எடுத்து, சேகரித்து வருகிறார். தினமும் ஒரே மாதிரி நின்றுகொண்டு, முகத்தை மட்டும் புகைப்படங்கள் எடுக்கிறார். இதுவரை 5,840 புகைப்படங்களை எடுத்திருக்கிறார். 22 வயதில் ஜொனாதனுக்கு ஏற்பட்ட இந்தப் பழக்கம், இன்று 39 வயதிலும் தொடர்கிறது.

தேதி வாரியாக வரிசையாகப் புகைப்படங்களை அடுக்கி வைத்திருக்கிறார். இவற்றை எல்லாம் மூன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக மாற்றியிருக்கிறார் ஜொனாதன். “நம் உடலில் தினசரி மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் அவற்றை மிகத் துல்லியமாக நம்மால் பார்க்க முடிவதில்லை.

தினமும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டால், என்னுடைய வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியும். என்னுடைய இந்த ப்ராஜக்ட் பற்றி ஆரம்பத்தில் என் காதலிக்கே சரியாகப் புரியவில்லை. யார் என்ன நினைத்தாலும் சாகும் வரை புகைப்படம் எடுப்பதை நிறுத்தப் போவதில்லை’’ என்கிறார் ஜொனாதன்.

தினமும் உங்களை புகைப்படம் எடுக்க சலிப்பா இல்லையா?

நியுயார்க்கில் வசிக்கிறார் ரிச்சர்ட் பிரின்ஸ். இவருடைய கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்குப் புகைப்படங்கள் விற்பனையாகின்றன. இந்தப் படங்கள் அனைத்தும் பிரின்ஸுக்குச் சொந்தமில்லை. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் பிறரின் புகைப்படங்களை எடுத்து, ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்து, காட்சிக்கு வைத்து விடுகிறார். சம்பந்தபட்டவர்களிடம் அனுமதி வாங்காமல் மிகவும் துணிச்சலோடு இந்தக் காரியங்களைச் செய்து வருகிறார்.

சமீபத்தில் நியு யார்க்கில் நடைபெற்ற அவருடைய கண்காட்சியில் ஒரு புகைப்படம் மட்டும் 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. ஒரு சிலர் பிரின்ஸ் மீது வழக்கு தொடுத்தார்கள். ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பி விடுகிறார் பிரின்ஸ். தன்னை ஒரு புகைப்படக்காரராக அவர் சொல்லிக்கொள்வதில்லை. `சேகரிப்பாளர்’ என்றே சொல்கிறார். தற்போது `ஒரிஜினல்’ என்ற தலைப்பில் மன்ஹாட்டனில் ஒரு கண்காட்சியை நடத்தி வருகிறார்.

’ஒரிஜினல்’ என்ற பெயரில் கண்காட்சி நடத்துறது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா பிரின்ஸ்?

அமெரிக்காவில் வசிக்கிறார் தாமஸ் நீல் ரோட்ரிகுயஸ். 1999ம் ஆண்டு முதல் ஒரு நாயை எடுத்து வளர்த்து வருகிறார். 15 வயதான அந்த நாய்க்குத் திடீரென்று வயிற்றில் இரண்டு கட்டிகள் வந்துவிட்டன. நாய் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். 15 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து வந்த செல்ல நாயை, மீதி இருக்கும் காலத்தில் மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் நீல்.

அரிசோனா, வாஷிங்டன் டி.சி., சான்ஃப்ரான்சிஸ்கோ, பால்டிமோர், கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற இடங்களுக்கு நாயுடன் சாகசப் பயணங்களை மேற்கொண்டார். “முதலில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே திட்டமிட்டேன். ஆனால் செல்ல நாய் பூவின் ஒத்துழைப்பால் அது 7 வாரங்களுக்கு நீடித்தது. இன்னும் சில நாட்களே அது என்னுடன் இருக்கப் போகிறது. வலியின்றி, நிம்மதியான மரணம் வரவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பமாக இருக்கிறது’’ என்கிறார் நீல்.

எத்தனை அன்பான மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x