Published : 02 Oct 2015 11:49 AM
Last Updated : 02 Oct 2015 11:49 AM

உலக மசாலா: 12 ஏக்கரில் பயிர் ஓவியம்

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் வசிக்கிறார் ஸ்டான் ஹெர்ட் என்ற கலைஞர். சமீபத்தில் தன்னுடைய மிகச் சிறந்த படைப்பு ஒன்றை மின்னியாபொலிஸில் உருவாக்கியிருக்கிறார். இவர் உருவாக்கியிருப்பது வயல்வெளியில் `பயிர் ஓவியம்’. 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் 1889-ம் ஆண்டு வான் காவின் மிகச் சிறந்த `ஆலிவ் மரங்கள்’ ஓவியத்தை வயலில் உருவாக்கியிருக்கிறார் ஸ்டான் ஹெர்ட். ஓவியத்தை வரைந்து, அதன் மீது விதைகளைப் போட்டு பயிர்களை வளர்க்கவில்லை ஸ்டான். வளர்ந்த பயிற்களைக் கத்தரித்து, வெட்டி, இடம் மாற்றி நட்டு ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார்.

இதற்காக 6 மாதங்கள் வேலை செய்திருக்கிறார். இந்தப் பிரமாண்ட ஓவியத்தை பறவைப் பார்வையில் இருந்து பார்த்தால்தான் ரசிக்க முடியும். மின்னியாபொலிஸிலிருந்து செல்லும் விமானங்களில் இருந்து முழு ஓவியத்தையும் பார்க்கலாம். “ஓட்ஸ், வெள்ளரி, பரங்கி, கீரை, கோதுமை போன்ற பயிர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் மஞ்சள், ஆரஞ்சு, பொன், பச்சை நிறங்கள் கிடைத்தன. என் மூளையில் பதிந்திருந்த விஷயம் அப்படியே காட்சியாகி இருப்பதில் எனக்கு சந்தோஷம். வான் கா மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு என்னால் முடிந்த அன்பைச் செலுத்தியிருக்கிறேன். வான் கா கோதுமை நிலத்தைத்தான் தன் ஓவியத்தில் காட்டியிருக்கிறார். கோதுமையுடன் ஓட்ஸையும் நான் சேர்த்துக்கொண்டேன்.

நான் விவசாயி கிடையாது. ஆனால் பயிர் ஓவியராக இருக்க வேண்டும் என்பது என் லட்சியம். வாரத்துக்கு 70 மணி நேரங்களைச் செலவிட்டு இதை உருவாக்கியிருக்கிறேன். ஆஸ்திரேலியா, கியூபா, இங்கிலாந்து, பிரேஸிலில் என்னுடைய பயிர் ஓவியங்களுக்கான காட்சியகங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் என் ஒருவனால் மட்டும் உருவானதில்லை. எனக்குப் பல்வேறு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஸ்டான் ஹெர்ட்.

வான் கா இருந்திருந்தால் அசந்து போயிருப்பார்!

செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி

தென்கொரியாவில் செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆரம்பித்துவிட்டனர். மனிதர்களுக்கு மட்டுமின்றி, செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி அவசியம் என்கிறார் கள். நீண்ட வாலை குட்டையாக்குவது, காதுகளைச் சிறியதாக மாற்றுவது, எடையைக் குறைப்பது, தழும்புகளை நீக்குவது, சுருங்கிய தோல்களைச் சரி செய்வது போன்ற பல விஷயங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாய்களுக்குச் செய்கிறார்கள்.

இதற்காக 4 ஆயிரம் ரூபாயிலிருந்து பல்லாயிரம் ரூபாய் வரை செலவு செய் கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரிகளின் தலைநகரமாக இருக்கிறது தென்கொரியா. அதிக அளவில் பிளாஸ்டிக் சர்ஜரிகள் இவர்கள் தான் செய்துகொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நாய்களின் இமைகளைத்தான் சர்ஜரி செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் நாய்களின் கண்கள் பெரியதாகவும் அழகாகவும் தெரிகின்றன. “செல்லப் பிராணிகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவக் காரணங் களுக்காகவே செய்து வருகிறோம்.

ஆனால் இதில் அழகும் சேர்ந்து கொள்கிறது. இதனால் நிறைய மக்கள் தங்கள் செல்லப் பிராணி களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய விரும்புகிறார்கள்’’ என்கிறார் ஒரு கால்நடை மருத்துவர். செல்லப் பிராணி உரிமையாளர்களின் உரிமையில் யாரும் தலையிட முடியாது, செல்லப் பிராணிகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்கிறார்கள் சிலர். மருத்துவ ரீதியாக செல்லப் பிராணிகளுக்கு இதன் மூலம் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் விலங்கு நல ஆர்வலர்களும் 63 சதவிகித தென்கொரிய மக்களும் எதிர்த்து வருகிறார்கள்.

அடக் கொடுமையே…

துக்க அடையாளமாக ஐஃபோன்

உலகிலேயே துக்கமான செய்திகளை மிகவும் செலவு செய்து இதுவரை யாரும் அனுப்பியதில்லை. சீனாவைச் சேர்ந்த பணக்கார இளைஞர் ஒருவர் தன் முன்னாள் காதலிக்குத் தகவல்களை புதிய வரவான 6எஸ் ஐபோன்களை வாங்கி, திரை மீது எழுதி அனுப்பியிருக்கிறார். விலை உயர்ந்த 9 ஐபோன்களை வாங்கினார். ஒவ்வொரு போனின் திரையிலும் `நீ என்னைப் பார்த்தாய், உனக்காக நான் கடினமாக உழைத்து வெற்றி பெற்றேன், நம் சந்திப்பின் முதல் ஆண்டு நிறைவு நாள் அன்று காதல் முறிந்தது, நான் 9 ஐபோன்களை உனக்குப் பரிசாக அளிக்கிறேன், நம் உறவு முறிவின் துக்க அடையாளமாக இந்த போன்கள் இருக்கட்டும்’ என்று எழுதினார். பிறகு புகைப்படங்கள் எடுத்துவிட்டு, போன்களை அனுப்பி விட்டார். இணையத்தில் ஐபோன் புகைப்படங்களை இதுவரை 15 ஆயிரம் தடவைகள் வெளியிட்டிருக்கிறார்.

பிரிவு துயரம் தரும்தான்… அதுக்காக இப்படியா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x