Published : 01 Mar 2017 09:55 AM
Last Updated : 01 Mar 2017 09:55 AM

உலக மசாலா: 100 மொழிகளை அறிந்த அசாதாரண மனிதர்!

இத்தாலிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிக்கார்டோ பிர்டானி. 86 வயதான இவர் உலகம் முழுவதும் மறைந்த, மறைந்துவரக்கூடிய 100 பாரம்பரிய மொழிகளைக் கற்றிருக்கிறார்! “கணிதத்தின் மீதுள்ள அலர்ஜியின் காரணமாக, ஆரம்பப் பள்ளிப் படிப்புடன் நிறுத்திக் கொண்டேன். விவசாய வேலைகளைச் செய்துவந்தேன். விரைவிலேயே இது என் துறை இல்லை என்பதை அறிந்துகொண்டேன். என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், வீடு முழுவதும் ரஷ்ய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். மொழி தெரியாததால் என்னால் அவற்றைப் படிக்க இயலவில்லை. அதற்காகவே ரஷ்ய மொழியை முதலில் கற்க ஆரம்பித்தேன். மொழி கற்கும் ஆர்வம் என்னை அப்படியே ஈர்த்துக்கொண்டது. அடுத்த 18 ஆண்டுகள் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் உள்ள பாரம்பரிய மொழிகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தேன். மொழிபெயர்ப்பை விட நேரடியாக ஒரு புத்தகத்தைப் படிப்பது அற்புதமானது. மொழிகளை மட்டுமின்றி அந்தந்த மக்களின் கலாச்சாரத்தையும் ஆழமாக அறிந்துகொண்டேன். சைபீரிய மக்கள், மங்கோலிய மக்கள், எஸ்கிமோ மக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவே அந்த மொழிகளையும் கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்ட மொழிகள் அனைத்தும் அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருந்தன. தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, சூரிய உதயம் வரை படிப்பேன். இந்த அதிகாலை நேரத்தில் என் மூளை அபாரமாக வேலை செய்யும். எதையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். தற்போது வயதாகிவிட்டதால் காலை 5 மணிக்குத்தான் கண் விழிக்க முடிகிறது. 70 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட மொழிகளையும் அனுபவங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன், விளக்கவுரை எழுதியிருக்கிறேன், பல்வேறு மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்றும் எழுதியுள்ளேன். இத்தாலிய மொழி அறிந்த யார் வேண்டுமானாலும் என் மொழியறிவைப் பரிசோதிக்க வரலாம். அவர்களுக்காக என் வீடு எப்பொழுதும் திறந்தே இருக்கும். உலகம் முழுவதிலுமுள்ள 100 மொழிகளைக் கற்றிருந்தாலும் எனக்கு ஆங்கிலம், ஜெர்மன் போன்ற பிரபல மொழிகள் தெரியாது. நான் இத்தாலியை விட்டு எங்கும் சென்றதில்லை. நான் படித்த புத்தகங்களில் இருந்ததைப் போல இன்று அந்த நாடுகள் இருக்கப் போவதில்லை. ரஷ்யாவையும் கிரேக்கத்தையும் மிக உயர்வாக மதிக்கிறேன். ஆனால் இன்றைய நிலையில் இரு நாடுகளும் என் எண்ணத்துக்கு நேர்மாறாக இருக்கின்றன” என்கிறார் ரிக்கார்டோ பிர்டானி.

100 பாரம்பரிய மொழிகளை அறிந்த அசாதாரண மனிதர்!

தாய்லாந்தின் பரிரம் நகரில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நாய் மீது கார் மோதியதில், அருகில் இருந்த குழிக்குள் விழுந்தது. சற்றுத் தொலைவில் இருந்த இந்த நாயின் சகோதரன் வேகமாக ஓடிவந்தது. அடிபட்ட நாயைப் பரிசோதித்தது. உயிர் இல்லை என்பதை அறிந்தவுடன் சற்றுநேரம் துக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு மண்ணைத் தன் வாயால் தள்ளி, உடலைப் புதைத்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காண்பவர்களைக் கலங்கடிக்கும் வீடியோ…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x