Published : 03 Jul 2015 10:52 AM
Last Updated : 03 Jul 2015 10:52 AM

உலக மசாலா: ஹீல்ஸ் போட்ட ஆண்!

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கிறார் பிராண்டன் கோன். ஓர் இணையதளத்தில் வேலை செய்து வருகிறார். பெண்கள் எப்பொழுதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பைப் போட்டால் கூட, அது ஏதோ யாருமே செய்ய முடியாத, கஷ்டமான விஷயமாகச் சொல்லிக்கொள்கிறார்கள் என்றார்.

உடனே ஒருநாள் முழுவதும் அவரை ஹை ஹீல்ஸ் செருப்பைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அவரது அலுவலகம். சம்மதம் சொன்ன பிராண்டன், தனக்கேற்ற ஹை ஹீல்ஸ் செருப்பை வாங்கினார். காலை 8 மணிக்குச் செருப்பை மாட்டிக்கொண்டு அலுவலகம் சென்றார். அவரது நடையே மாறிவிட்டது. ஒவ்வோர் அடியையும் பார்த்துப் பார்த்து வைத்தார். நடப்பதைத் தவிர்த்தார்.

பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருந்தார். நடக்க வேண்டிய இடங்களுக்கு காரையும் லிஃப்டையும் பயன்படுத்திக்கொண்டார். அவரது கலகலப்பான முகமே மாறிவிட்டது. நேரம் செல்லச் செல்ல வலியால் துடிக்க ஆரம்பித்தார். மாலை வந்தவுடன் வீட்டுக்குச் சென்றவர், ஜன்னல் வழியாக ஹை ஹீல்ஸ் செருப்புகளைத் தூக்கி எறிந்தார்.

பிராண்டனின் அனுபவத்தை அப்படியே படம் பிடித்திருந்தது அவரது அலுவலகம். ‘’பாதம் மட்டுமல்ல, கால் முழுவதுமே பயங்கர வலி’’ என்று சொன்ன பிராண்டன், பெண்களைப் பற்றிய தவறான தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொண்டாரா, இல்லையா என்பதை மட்டும் இன்னும் சொல்லவில்லை.

வலியை விலை கொடுத்து வாங்கியிருக்கார் பிராண்டன்…

நியு ஜெர்சி வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வீடு ஒன்று மீடியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த வீட்டில் வசிப்பவர்கள், தங்கள் ரத்தம் உறையும் அளவுக்கு கடிதங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடிதங்களை அனுப்புகிறவர் ’வாட்சர்’. அமானுஷ்ய கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயர்தான் வாட்சர். அந்த வீட்டை 2014ம் ஆண்டுதான் டெரெக், மரியா தம்பதியர் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய மூன்றாவது நாளில், ‘என் தாத்தா இந்த வீட்டைக் காவல் காத்தார். பிறகு என் அப்பா காவல் காத்தார். இது என்னுடைய நேரம்’ என்று ஒரு கடிதம் வந்தது. யாராவது விளையாடுவார்கள் என்று பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

இரண்டாவது கடிதத்தில், ‘இந்த வீட்டுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறதா?’ என்று கேட்டு இருந்தது. இந்த முறை உண்மையிலேயே மிரண்டு போனார்கள். அடுத்த கடிதத் தில், ‘இளம் ரத்தத்துக்கு உரியவர் கீழறையில் தானே உறங்கு கிறார்?’ என்று கேட்டிருந்தது. உடனே டெரெக் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. காவல்துறை விசாரணையில் இந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இது யாரோ விளையாட்டுக்காகச் செய்த வேலை என்று நினைக்கிறது காவல்துறை. ஆனால் டெரெக் இனி அந்த வீட்டில் குடியேறுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்.

அடப்பாவமே... ஒரு வீட்டை வாங்கி, குடியிருக்கக் கூட முடியலையே...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x