Published : 19 May 2016 08:36 AM
Last Updated : 19 May 2016 08:36 AM

உலக மசாலா: ஸ்ட்ராங் பிரதருக்கு வந்தனம்!

சீனாவின் ஜிலின் நகரில் வசித்து வரும் யூ ஜின், 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி 2 கால்களையும் 9 கை விரல்களையும் இழந்துவிட்டார். முதலில் தனது வாழ்க்கையே முடிந்து போனதாக நினைத்த யூ ஜின், இன்று சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை வைத்து தனது வாழ்க்கையை உருட்டி வருகிறார். “கடந்த 1993-ல் வேலை செய்யும் இடத்தில் தவறி விழுந்தேன். இதில் கால்களையும் கை விரல்களையும் இழந்தேன். என் மகள் பிறந்த மூன்றாம் நாள் மனைவி இறந்துவிட்டார். கொஞ்ச காலம் பிச்சை எடுத்து குழந்தைக்கு உணவு கொடுத்தேன். பின்னர் என் நிலையைக் கண்ட நண்பர்கள் சிலர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

பிச்சை எடுப்பதை விட்டு, ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்தேன். கையில் இருந்த சேமிப்பைக் கொண்டு, சைக்கிள் ரிப்பேர் செய்வதற்கான கருவிகளை வாங்கினேன். இதுகுறித்த பயிற்சியையும் எடுத்துக்கொண்டேன். தொடக்கத்தில் ஒரே விரலில் கருவிகளைப் பிடிப்பது மிகவும் சிரமமாகவும் சவாலாகவும் இருந்தது. தொடர் பயிற்சி காரணமாக ரிப்பேர் வேலை எளிதானது. என் மீது கருணை கொண்ட வாடிக்கையாளர்கள், என் கடையைத் தேடி வந்தனர். ஓரளவு வருமானம் வந்தது. என் தேவைகளையும் என் மகளின் தேவைகளையும் என்னால் பார்த்துக்கொள்ள முடிந்தது. மகளுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டேன். கால்களும் விரல்களும் இல்லாவிட்டாலும் என் உழைப்பில் வாழ்வதுதான் என்னை மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்ளும்படியும் வைத்திருக்கிறது” என்கிறார் யூ ஜின். கடந்த வாரம் சீன ஊடகங் களில் யூ ஜின் வாழ்க்கை பற்றிய தகவல் வைரலாக பரவியது. இதன் மூலம் பல லட்சம் பேர் உத்வேகம் அடைந்ததாக சொல்லியிருக்கிறார்கள். ‘ஸ்ட்ராங் பிரதர்’ என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

ஸ்ட்ராங் பிரதருக்கு வந்தனம்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மிகப் பெரிய நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சமீப காலமாக கழுத்தில் கட்டக்கூடிய டைகளையும் வழங்கி வருகிறார்கள். அந்தப் பகுதியில் வேலை இல்லாத இளைஞர்கள், அகதிகள் ஏராளமாக இருப்பதாலும் அவர்களால் உடைகளுக்கு ஏற்ற டைகளை வாங்க முடியாததாலும் நூலகத்தில் இலவசமாக டைகளை வழங்கி வருகிறார்கள். புத்தகங்களைப் போலவே, டைகளை எடுத்துச் செல்பவர்கள் 3 வாரங்களுக்குள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மீண்டும் டை தேவை என்றால் வேறொரு டையை எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சேவையை ‘டைப்ரரி’ என்று அழைக்கிறார்கள். “மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் எங்களின் நோக்கம்.

இந்தப் பகுதியில் ஏழ்மை அதிகம். அவர்களின் அறிவு தாகத்துக்கு தீனி போடுவதுடன், இதுபோன்ற உதவிகளையும் செய்து வருகிறோம். நியூ யார்க்கில் உள்ள குயின்ஸ் பப்ளிக் லைப்ரரிக்கு சென்றபோதுதான் டைகள் வழங்குவதைக் கண்டேன். அதைத் தான் எங்கள் நூலகத்திலும் செயல்படுத்தி இருக்கிறேன். மிகப் பிரமாதமான 12 டைகளுடன் இந்தச் சேவையை ஆரம்பித்தோம். இன்று தேவை அதிகம் இருப்பதால் டைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறோம். அவரவர் வேலைக்கு ஏற்ற டைகளை தேர்வு செய்து, எடுத்துச் செல்ல வேண்டியதுதான்” என்கிறார் நூலகர் நாட் எட்டி.

டைப்ரரி… புதிய சேவை !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x