Published : 19 Nov 2015 10:13 AM
Last Updated : 19 Nov 2015 10:13 AM

உலக மசாலா: ஷாவியின் பயணம்!

ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் வசிக்கிறார் நீனா பரனோவ்ஸ்கா. ஒருநாள் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் கடுமையான வலியில் துடித்துக்கொண்டிருந்த நாயைப் பார்த்தார். உடனே வீட்டுக்கு அழைத்து வந்தார். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்தார். ஷாவி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் மெதுவாக குணம் அடைந்தது. மிக புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது. எதையும் வேகமாகக் கற்றுக்கொண்டது. நீனாவுக்கு ஷாவி மீது அளவற்ற அன்பு இருந்தாலும் அவரது குறைவான வருமானத்தில் அம்மா, குழந்தை, 3 பூனைகள், 2 நாய்களை வளர்த்து வருவதே கடினமாக இருந்தது.

அவரால் சமாளிக்க முடியவில்லை. இணையதளத்தில் ஷாவியை யாராவது தத்தெடுத்துக்கொள்வீர்களா என்று வேண்டுகோள் விடுத்தார். 300 கி.மீ. தொலைவில் இருந்த நீனாவின் தோழி ஒருவர், ஷாவியை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். ஒருநாள் காரில் வந்து அழைத்தும் சென்றுவிட்டார். புதிய இடத்துக்குச் சென்ற ஷாவி, எதையும் உட்கொள்ளவில்லை. இயல்பாக இருக்கவில்லை. இரண்டாவது நாள் காணாமல் போய்விட்டது. நீனாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வேறோர் இடத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். 300 கி.மீ. தூரத்தைக் கடந்து, 2 வாரங்களுக்குப் பிறகு ஷாவி சரியாகப் புதிய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ‘‘என்னால் நம்பவே முடியவில்லை.

ஒரு நாயால் இவ்வளவு தூரத்தை நினைவில் வைத்து, பயணம் செய்து வர முடியுமா? அதுவும் புதிய இடம் ஷாவிக்குத் தெரியாது. மனிதர்களின் அன்புக்குச் சிறிதும் குறைவானதில்லை விலங்குகளின் அன்பு. இனி என்ன கஷ்டம் வந்தாலும் நான் ஷாவியை விடப் போவதில்லை. ஷாவிக்கு அனுப்புவது பிடிக்கவில்லை என்று தெரிந்திருந்தால் அனுப்பி இருக்கவே மாட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டுத் திரும்பி வந்தபோது, ஷாவி கொஞ்சமும் கோபத்தைக் காட்டவில்லை. பாய்ந்து ஓடி வந்து அணைத்துக்கொண்டது” என்று நெகிழ்கிறார் நீனா.

ஷாவியின் பயணம் பிரமிப்பூட்டுகிறது!

ஜப்பானில் புதிய வகை சாக்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘க்யூர்டெக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள சாக்ஸை அணிந்துகொண்டால் வியர்வையை உறிஞ்சிவிடும். நறுமணத்தை வெளியிடும். ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்தும் காப்பாற்றும். காம்பி இன மரப்பட்டைகளில் இருந்து உருவாக்கப்பட்ட வாஷி காகித இழைகளால் இந்த சாக்ஸ் உருவாக்கப்படுகிறது. இது கிருமி நாசினியாகவும் துர்நாற்றத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது.

பாக்டீரியா, துர்நாற்றம், ஈரப்பதத்தை உறிஞ்சி, எப்பொழுதும் தூய்மையான சாக்ஸாகக் காட்சியளிக்கிறது. ‘‘இந்த சாக்ஸை அணிந்துகொண்டால் துர்நாற்றம் வருகிறது என்ற சங்கடமே ஏற்படாது. தன்னம்பிக்கையுடன் சாக்ஸைக் கழற்றாமல் எங்கும் செல்ல முடியும்’’ என்கிறார்கள் க்யூர்டெக்ஸ் நிறுவனத்தினர். கறுப்பு, சாம்பல் என 2 வண்ணங்களில் கிடைக்கின்றன. கால் விரல்களை எளிதாக நுழைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஜோடி க்யூர்டெக்ஸ் சாக்ஸ் 1600 ரூபாய்.

துவைக்காவிட்டாலும் மூக்கை மூட வேண்டியதில்லை

பெய்ஜிங் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாடகைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள் மாணவர்கள். வாரத்துக்கு 5 வகுப்புகள், 2 வாரங்கள், ஒரு மாதம், 6 மாதங்கள் என்று தங்களுக்குப் பதில் வேறு ஆட்களை வாடகைக்கு நியமித்து, வகுப்புகளைக் கவனிக்க வைக்கிறார்கள். வாடகைக்கு வரும் மனிதர்களுக்கு மாணவர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கிறது. புகைப்படம் ஒட்டி, போலி அட்டைகளை அவர்களுக்கு வழங்கி விடுகிறார்கள்.

ஆங்கிலம், சீனம், தத்துவம் போன்ற வகுப்புகளுக்கு அதிக அளவில் வாடகை ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு வருகிறவர்கள் சம்பாதிக்கிறார்கள். இணையதளங்களில் 700 குழுக்கள் மாணவர்களுக்குப் பதிலாக வகுப்புகளைக் கவனிக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 300 ஆட்கள் இருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால், வாடகைக்கு வந்து அமர்பவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்கிறார் ஒரு பேராசிரியர்.

அடப்பாவிகளா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x