Published : 16 Mar 2016 10:12 AM
Last Updated : 16 Mar 2016 10:12 AM

உலக மசாலா: வேற்று கிரகவாசி... ரேமுன்டோ... பிரமிடு... புரியாத புதிர்!

மெக்சிகோவைச் சேர்ந்த விவசாயி ரேமுன்டோ கோரோனா. 22 அடிகள் உயரம் கொண்ட அஸ்டெக் பிரமிடு ஒன்றை 74 கி.மீ. தூரத்தில் மெக்சிகோ, அமெரிக்கா எல்லையில் உள்ள பாலைவனத்தில் கட்டியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரக மனிதர் ஒருவர் வந்து, இந்தப் பிரமிடை உருவாக்கச் சொன்னதாகச் சொல்கிறார் ரேமுன்டோ.

‘’ஒரு நாள் என் வீட்டுக்கு மிக உயரமான மனிதர் ஒருவர் வந்தார். அவரது கண்கள் தேன் நிறத்தில் மின்னின. வெள்ளை முடி. தன்னுடைய பெயரை ஹெருலேகா என்றும் நெஃப்லின் என்ற கிரகத்தில் இருந்து வருவதாகவும் சொன்னார். நம் பூமியை விட 20 மடங்கு பெரிதான கிரகம். ஓரியன் விண்மீன் தொகுப்பில் அது இருக்கிறது என்றார். அப்போது எனக்கு 33 வயது. என் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்த நேரத்தில் என் கனவில் அந்த வேற்று கிரக மனிதர் தோன்றினார். அடுத்த சில நாட்களில் என் வீட்டின் கதவை அதே மனிதர் தட்டினார். நான் பயந்து ஓடப் போனேன். அவர் என்னைத் தடுத்தார். கடவுளா என்று கேட்டேன். நான் உன்னைப் போல ஒரு மனிதன் என்றார்.

அவர்தான் இந்தப் பிரமிடைக் கட்டச் சொன்னார். காற்று, மழை, புயலால் சேதமடையாத, வானை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரமிடைத் தனக்காக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கிரகத்தில் பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்கிறார்கள். ’’ என்கிறார் ரேமுன்டோ. பிரமிடு கட்டுவது மிகவும் கடினமான பணி. இதற்காகப் பல்வேறு கணிதங்களைப் போட வேண்டியிருக்கும்.

அதுவும் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ரேமுன்டோவால் அந்தக் கணக்குகள் போடுவது எளிதல்ல. இதை எவ்வாறு ரேமுன்டோவால் கட்டி முடிக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை அஸ்டெக் மக்களின் வழிதோன்றல் என்பதால், மரபணுவிலேயே இந்தத் திறமை இருந்திருக்குமோ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வேற்று கிரகவாசி… ரேமுன்டோ… பிரமிடு… புரியாத புதிர்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது ஒரு வித்தியாசமான புத்தர் ஆலயம். வாட் சம்ப்ரன் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் தங்கத்தால் ஆன மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. இது தவிர, ஏராளமான புத்தர் சிலைகள் ஆலயத்துக்குள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது 17 மாடிகள் கொண்ட, இளம் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட கோபுரத்தைச் சுற்றியிருக்கும் ராட்சத டிராகன்தான். டிராகனின் உடலுக்குள் படிகள் இருப்பதால், அதன் மூலம் மாடிகளுக்குச் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில மாடிகளுக்குப் பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த ஆலயத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அதிகம் இல்லை. இதை யார், எப்போது கட்டினார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

அழகான ஆலயத்தைக் கட்டிவிட்டு, தங்களை யார் என்று காட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x