Published : 16 Dec 2016 10:24 AM
Last Updated : 16 Dec 2016 10:24 AM

உலக மசாலா: வீட்டுக்குள்ளே அக்வேரியம்!

வீடுகளில் அலங்கார மீன்களைத் தொட்டியில் வளர்ப்பார்கள். ஆனால் இஸ்ரேலைச் சேர்ந்த இவாய் ஃப்ரெச்சர் வீட்டுக்குள்ளே ஒரு கடல்வாழ் விலங்குகள் காட்சியகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். உலகிலேயே வீட்டுக்குள் இருக்கும் மிகப் பெரிய கடல்வாழ் விலங்குகள் காட்சியகம் இதுதான். ‘சின்ன வயதிலிருந்தே எனக்கு நீர்வாழ் உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். ஆறு வயதில் மிகச் சிறிய வீட்டில் ஒரு தொட்டியில் மீன்களை வளர்க்க ஆரம்பித்தேன். 12 ஆண்டுகளுக்கு முன் 3,700 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பெரிய மீன் தொட்டியை வீட்டில் வைத்திருந்தேன். ஆனால் அது எப்படியோ உடைந்து, வீடு முழுவதும் பாழாகிவிட்டது. அப்படியும் என் ஆர்வம் தணியவில்லை. என் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டு, பெரிய கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் இதை வேடிக்கை பார்ப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு. தினமும் ஒருமுறை தொட்டிக்குள் இறங்கி ஸ்கூபா டைவிங் செய்வேன். மீன்கள் என் கைகளில் இருந்து உணவுகளை எடுத்துக்கொள்ளும்’ என்கிறார் இவாய் ஃப்ரெச்சர். 30 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்குள் பவளப்பாறைகள், 150 வகையான மீன்கள், 30 வகை கடல்வாழ் விலங்குகள் வசிக்கின்றன. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு இயந்திரங்கள் உள்ளன. கடல் போன்ற சூழலை உருவாக்குவதற்கு செயற்கையாக அலைகள் எழுப்பப்படுகின்றன.

பவளப்பாறைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரம் ஒருமுறை புதிதாக 1000 லிட்டர் கடல் நீரைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பெரும்பாலும் கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம் கடலுக்கு அருகேதான் அமைக்கப்பட்டிருக்கும். பழைய நீரை வெளியேற்றுவதும் புதிய நீரை உள்ளே விடுவதும் எளிதாக இருக்கும். ஆனால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியகத்தைப் பராமரிப்பதும் கடினம்; செலவும் அதிகம்.

வீட்டுக்குள்ளே அக்வேரியம்!

இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா டேப்பிங், தன்னுடைய 3 குழந்தைகளுக்குக் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசுகள் உலகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 87 கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொடுத்தவர், இந்த ஆண்டு 97 பரிசுகளாக அதிகரித்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் எம்மா வெளியிட்ட படங்களைப் பார்த்தவர்கள், அளவுக்கு அதிகமான பரிசுகளைக் கொடுத்து, குழந்தைகளைக் கெடுக்கிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ‘பரிசுப் பொருட்களால் குழந்தைகள் எப்படிக் கெட்டுப் போவார்கள்?

ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களைத்தான் நான் பரிசாக அளிக்கிறேன். அடுத்த கிறிஸ்துமஸ் வரை ஒரு பரிசு கூட வாங்க மாட்டேன். ஜூலையில் பொருட்களை வாங்க ஆரம்பித்து, வண்ணத்தாள்களால் அலங்கரித்து, பெயர் எழுதி வைப்பது ஒன்றும் அத்தனை எளிதான விஷயமில்லை. கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் மலை போல் குவிந்திருக்கும் பரிசுகளை, ஒவ்வொன்றாக என் குழந்தைகள் பிரித்து மகிழ்வதைக் காட்டிலும் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? நாங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில்லை. ஆடம்பரமாக வேறு எதையும் செய்வதில்லை’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார் எம்மா.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x