Published : 26 Aug 2016 09:58 AM
Last Updated : 26 Aug 2016 09:58 AM

உலக மசாலா: விவசாயிகளின் பிரச்சினைகள் குறையுமே!

தர்பூசணிக் கொடியில் ஒரு தடவைக்கு 1 முதல் 4 தர்பூசணிகளை மட்டுமே அறுவடை செய்ய முடியும். ஆனால் சீனாவைச் சேர்ந்த விவசாயத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, ஒரே கொடியில் 131 தர்பூசணிப் பழங்களை அறுவடை செய்திருக்கிறது. ஜெங்ஜோவ் விதைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சூப்பர் தர்பூசணிக் கொடியை உருவாக்கி, கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுவிட்டது. பொதுவாக தர்பூசணிக் கொடிகளில் 12 காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

அதில் சில காய்கள் உதிர்ந்துவிடும். இன்னும் சில காய்கள் வெம்பிவிடும். இறுதியில் வலுவான சில காய்கள் மட்டுமே பழமாகும். ஆனால் சூப்பர் தர்பூசணிக் கொடியில் காய்கள் உதிர்வதோ, வெம்புவதோ இல்லை. ஏப்ரல் 26-ம் தேதி 100 சதுர மீட்டர் நிலத்தில் விதை நடப்பட்டது. மே முதல் தேதி விதையில் இருந்து முளை வந்தது. ஜூன் முதல் தேதி பூக்க ஆரம்பித்தது. ஜூலை 31 அன்று 131 தர்பூசணிப் பழங்கள் அறுவடை செய்யப்பட்டன. எண்ணிக்கையில் மட்டுமல்ல, எடையிலும் இந்த சூப்பர் தர்பூசணிக் கொடி அசர வைத்துவிட்டது.

மிகச் சிறிய தர்பூசணி 5 கிலோ எடையும் மிகப் பெரிய தர்பூசணி 19 கிலோ எடையும் கொண்டவையாக இருந்தன. சூப்பர் தர்பூசணிக் கொடிக்கு ‘டையலாங் 1508’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் சக்தி, இந்தக் கொடிகளுக்கு அதிகமாக இருக்கிறது. ‘90 நாட்களில் 131 பழங்கள் விளைவித்ததற்கு முக்கியக் காரணம் தண்ணீரின் வெப்பநிலை. எங்கள் குழுவினர் 90 நாட்களும் நீர்ப் பாய்ச்சும்போது வெப்பநிலையைக் கண்காணித்தனர். ஒரே அளவு இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்’ என்கிறார் ஸுகாங் என்ற ஆராய்ச்சியாளர்.

இப்படி விளைந்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் குறையுமே!

ஜெர்மனியில் உணவு வீணாவதைத் தடுக்கப் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் யுவோகி உணவு விடுதி, அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது. வீணாகும் உணவுப் பொருட்களுக்குக் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. ‘தங்களுக்குத் தேவையான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வதற்காகவே பஃபே வழிமுறையைக் கையாள்கிறோம். அதிலும் உணவுகளைத் தேவைக்கு அதிகமாக எடுத்து வைத்துக்கொண்டு, அப்படியே வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். பஃபேக்கான நோக்கமே இதில் அடிபட்டு விடுகிறது.

அதற்காக நாங்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் 5 வகை உணவுகளைக் குறைவாக வழங்குகிறோம். தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் வழங்குவோம். இப்படிப் பார்த்துப் பார்த்து உணவுகளை அளிக்கும்போதும் பலர் வீணாக்கிவிடுகின்றனர். அவர்களுக்கு உணவுக்கான கட்டணத்துடன் வீணாகும் உணவுக்கான கட்டணத்தையும் வசூலிக்கிறோம். இப்படிச் செய்யும்போது அடுத்த தடவை உணவுகளை வீணாக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். வீணாகும் உணவுகளுக்கான கட்டணம் முழுவதையும் அறக்கட்டளைகளுக்கு வழங்கி விடுகிறோம். இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து உணவு வீணாவது குறைந்து வருகிறது. மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது’ என்கிறார் உணவு விடுதியின் உரிமையாளர் குவோயு.

அட! சாப்பிடுவதற்கும் கட்டணம்; வீணாக்குவதற்கும் கட்டணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x