Published : 04 Jul 2017 10:34 AM
Last Updated : 04 Jul 2017 10:34 AM

உலக மசாலா: விளையாட்டு, விபரீதமான பரிதாபம்!

அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் யூடியூப் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார் 22 வயது பெட்ரோ ரூயிஸ். மனைவி மோனாலிசா பெரெஸ், 3 வயது மகளுடன் சேர்ந்து தினமும் ஏதாவது குறும்புகளை வீடியோ எடுத்து, யூடியூபில் வெளியிட்டு வந்தார். இவர் களது மோனாலிசா யூடியூப் சேனலுக்குப் பல்லாயிரக் கணக்கானவர்கள் சந்தா தாரர்களாக இருக்கிறார்கள். டோனட் மீது சர்க்கரைக்குப் பதிலாக குழந்தையின் பால் பவுடர் தூவிச் சாப்பிடுவது, முட்டையில் அதிகமான மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடுவது என்று சாதாரணக் குறும்புகளாக ஆரம்பித்து நாளடைவில் அது பெரிய அளவுக்குச் சென்றுவிட்டது. 3 லட்சம் சந்தாதாரர்களைப் பெறுவதற்காக மிகப் பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டினார் பெட்ரோ. உலகிலேயே சக்தி வாய்ந்த துப்பாக்கியால் மோனாலிசா சுட வேண்டும், அந்தக் குண்டை ஒரு புத்தகத்தால் பெட்ரோ தடுத்து நிறுத்த வேண்டும். பல முறை இவற்றை இருவரும் பரிசோதித்துப் பார்த்தனர். குடும்பத்தினர் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். மோனாலிசாவும் வேண்டாம் என்றார். ஆனால் பெட்ரோ விடவில்லை. அன்று இரண்டு கேமராக்களை வைத்து, இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்க ஆரம்பித்தனர். மோனாலிசாவின் துப்பாக்கிக் குண்டு இந்த முறை பெட்ரோ பிடித்த புத்தகத்தையும் தாண்டி, அவர் மார்பில் பாய்ந்துவிட்டது. உடனே மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். 19 வயது மோனாலிசா, 3 மாதக் கர்ப்பத்துடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். “எல்லாவற்றையும் பெட்ரோதான் திட்டமிடுவார். அவருக்கு உதவுவதுதான் என் வேலை. இந்த முறை, இவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்திக்க வேண்டுமா என்று கேட்டுக்கொண்டேதான் இருந்தேன். இறுதியில் என் அருமை பெட்ரோவை, என் கையாலேயே சுட்டுக் கொன்றுவிட்டேன். வாழ்நாள் முழுவதும் இந்தத் துயரம் தீராது” என்று கதறுகிறார் மோனாலிசா. பெட்ரோவின் பெற்றோர் இது முழுக்க முழுக்கத் தங்கள் மகனின் திட்டம் என்றும் இது தற்செயலாக நடந்த விபத்து என்றும் மோனாலிசாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விளையாட்டு, விபரீதமான பரிதாபம்!

ஸ்பெயினைச் சேர்ந்த 53 வயது அலாடினோ மோன்டெஸ் சிறிய வயதிலிருந்து மான் வேட்டையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக வேட்டையை விட்டுவிட்டார். “நான் ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு மாடுகளுடன் மான் குட்டி ஒன்று இருப்பதைக் கண்டேன். பொதுவாக மான்கள் மாடுகளுடன் சேர்ந்து இருப்பதில்லை. அருகில் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் காயங்களைக் கண்டேன். குட்டிக்குச் சிகிச்சை அளித்தேன். நன்றாகக் குணமடைந்த பிறகு காட்டில் விட்டேன். ஆனால் மறுநாளே மான் என் வீட்டுக்குத் திரும்பிவிட்டது. அன்று முதல் மானை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறேன். மானைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொண்ட பிறகு. நான் வேட்டையாடியதை நினைத்து வருத்தப்படாத நாளே இல்லை. என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது இந்த பாம்பி மான். வீட்டிலும் வெளியிலும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். விலங்குகளை வேட்டையாட வேண்டாம் என்று விழிப்புணர்வும் ஊட்டி வருகிறேன்” என்கிறார் அலாடினோ.

மனதை மாற்றிய மான்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x