Published : 05 Aug 2016 09:53 AM
Last Updated : 05 Aug 2016 09:53 AM

உலக மசாலா: விமான உணவு விடுதி!

சீனத் தொழிலதிபர் லி லியாங், ஒரு விமானத்தை உணவு விடுதியாக மாற்றியிருக்கிறார்! வுஹான் நகரில் போயிங் 737 விமானம், சீனாவின் முதல் விமான உணவு விடுதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. “சென்ற ஆண்டு விமானத்தை வாங்கினேன். 4 மாதங்களில் இந்தோனேஷியாவுக்கும் வுஹான் நகருக்கும் 8 முறை சென்று வந்தது.

விமானத்தின் பாகங்கள் பலவற்றை மாற்ற வேண்டியிருந்தது. அதற்கு ஏராளமாக பணம் தேவைப்பட்டது. அப்போதுதான் விமானத்தை உணவு விடுதியாக மாற்றிவிடலாம் என்ற யோசனை உதித்தது. இது சாதாரண உணவு விடுதியாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். நிறைய செலவு செய்து, பிரமாதமான உணவு விடுதியாக மாற்றிவிட்டேன். இரவு உணவு ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. காக்பிட் பகுதியில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் இதைவிட இரு மடங்கு அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்’’ என்கிறார் லி லியாங்.

விமானத்தில் உணவு என்றால் விலை குறைவாகவா இருக்கும்?

ஜப்பானைச் சேர்ந்த ரிசா ஹிராகோ, புகழ்பெற்ற மாடல். ஃபேஷன் பிராண்ட்களுக்கும் இசை வீடியோக்களுக்கும் மாடலாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிசா வெளியிட்டிருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. 45 வயது ரிசா, 18 வயது பெண்ணைப் போல அவ்வளவு இளமையாக இருக்கிறார்!

“ஆரோக்கியமான வாழ்க்கை முறையால்தான் நான் இவ்வளவு இளமையாக இருக்கிறேன். ஆரோக்கியமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுகிறேன். வீட்டில் தயாரிக்கும் பழச் சாறுகளையும் தேநீரையும் மட்டுமே பருகுகிறேன். பாதாம் பால், பாதாம் வெண்ணெய், தேன், வாழைப்பழம் போன்றவை என் விருப்பமான உணவுகள். ரசாயனம் கலக்காத இயற்கையான அழகுப் பொருட்களைதான் பயன்படுத்துகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்கிறார் ரிசா.

45 வயதிலும் அசத்தும் மாடல்!

ப்ளோரிடாவைச் சேர்ந்த சார்லஸ் வியாண்ட் சாகசக்காரர். கடந்த ஜனவரி மாதம் முதலைகளுடன் சேர்ந்து நீச்சலடித்தார். எல்லோரும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, எந்தவிதத் தீங்கும் இன்றி, பத்திரமாக வெளியே வந்தார். தற்போது ஆடைகள் இன்றி, தேனீக்களுடன் 45 நிமிடங்கள் நின்று, அடுத்த சாகசத்தை அரங்கேற்றி இருக்கிறார். “சாகசம் செய்வது என்றால் அத்தனை சந்தோஷமாக இருக்கும். 45 நிமிடங்கள் தேனீக்களுடன் இருந்தேன்.

சில தேனீக்கள் என் உடலிலும் முகத்திலும் ஊர்ந்தன. ஆனால் ஒரு தேனீ கூட என்னைக் கொட்டவில்லை. உண்மையில் நானே இதை எதிர்பார்க்கவில்லை. 100 தேனீக்களிடமாவது கடி வாங்கப் போகிறோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பத்திரமாகத் திரும்பி வந்தேன். 45 நிமிடங்களும் எந்த நேரமும் கடிக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே இருந்தது பெரிய அவஸ்தையாக இருந்தது. முதலைகளுடன் நீந்தியபோது கூட நான் இவ்வளவு அச்சப்படவில்லை. சின்னஞ்சிறு தேனீக்களைக் கண்டுதான் அஞ்சினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்தது’’ என்கிறார் சார்லஸ் வியாண்ட்.

சார்லஸுக்கு பொழுதுபோக்கே சாகசம்தானோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x