Published : 23 Feb 2016 10:11 AM
Last Updated : 23 Feb 2016 10:11 AM

உலக மசாலா: விமானம் ஓட்டும் நாய்கள்

நாய்களை வைத்து விமானம் ஓட்டும் முயற்சி பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நாய்கள் கார் ஓட்டியுள்ளன, காவல்துறைக்குத் துப்பு துலக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. அதனால் நாய்களால் விமானத்தையும் ஓட்ட முடியும் என்கிறார் நிகழ்ச்சியை வழங்க இருக்கும் ஜாமி தீக்ஸ்டன்.

1 லட்சம் நாய்களில் இருந்து 12 நாய்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நாய்களுக்கு 10 வாரங்கள் பயிற்சியளிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பயிற்சி காலத்தில் நாய்களின் இயல்பு, புத்திசாலித்தனம், பொறுமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம், நினைவுத் திறன், தகவல் பரிமாற்றம் போன்றவற்றைக் கண்காணிக்க நிபுணர்கள் காத்திருக்கிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாய், விமானம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்பப்பட இருக்கிறது. நாய்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் சிங்கிள் இன்ஜின் விமானத்தை ஒரு நாய் ஓட்டிச் செல்வதைக் காட்டப் போகிறார்கள்.

நிச்சயமாக ஒரு புத்திசாலி நாயால் விமானத்தை ஓட்ட முடியும் என்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள். ஆனால் நாய்கள் உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி கோரென், ‘‘3 வயது மனிதக் குழந்தையை விமானம் ஓட்ட அனுமதிப்போமா? 3 வயதுக்குள்தான் இருக்கின்றன இந்த நாய்கள். நாய்கள் புத்திசாலித்தனமானவைதான். அதற்காக மனிதர்கள் நினைப்பதை எல்லாம் நாய்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்று கடுமையாக எதிர்க்கிறார். ஆக்ஸ்போர்ட் சயின்டிபிக் ஃபிலிம்ஸின் க்ரியேட்டிவ் டைரக்டர், ‘‘பாதுகாப்பாகவும் துன்புறுத்தாமலும் பயிற்சியளிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதி புத்திசாலி நாயால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்கிறார்.

உலகின் முதல் நாய் விமானி என்ற பட்டம் எந்த நாய்க்குக் கிடைக்கப் போகுதோ...



ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு மொபைல் போன் கடையில், ஐபோன்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு ஒரு விநோத வழியைக் கையாள்கிறார்கள். ஒவ்வொரு ஐபோனும் மத குருவால் ஆசிர்வதிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ‘’ஆதாம், ஏவாள் சாத்தானின் ஆப்பிளைச் சாப்பிட்டதால், இங்குள்ள மக்கள் ஆப்பிள் ஐபோன்களைச் சாத்தான்களாக நினைக்கிறார்கள். அதனால் விற்பனை மிக மோசமாக இருந்தது. மத குருவால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் வாங்கினால் எந்தத் தீய சக்தியும் அண்டாது என்பதைச் சொல்லி விற்பனை செய்து வருகிறோம்.

அதனால் ஒவ்வொரு போனையும் குரு மந்திரம் சொல்லி, ஆசிர்வதித்து தருகிறார். இப்பொழுது விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது’’ என்கிறார் கடையின் மேனேஜர் ஜார்ஜி மச்சவாரியானி. இந்த விஷயம் வெளியே வந்து, ஏகப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்தது. ஒவ்வொரு ஐபோனையும் ஆசிர்வதிக்கவில்லை, கடையையும் கடையின் ஊழியர்களையும்தான் குரு ஆசிர்வதித்தார் என்று இப்போது சொல்லிவிட்டார்கள்.

வியாபாரம் ஆகணும்னா என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x