Published : 23 Mar 2017 10:51 AM
Last Updated : 23 Mar 2017 10:51 AM

உலக மசாலா: வாழ்ந்து காட்டும் டவுன்சிண்ட்ரோம் ஜோடிக்கு வாழ்த்துகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த மரியானும் டாம்மி பில்லிங்கும் டவுன்சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள். 18 மாத காதலுக்குப் பிறகு, 1995-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களைவிட எதிர்த்தவர்களே அதிகம். ஆனால் 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இருவரும் மகிழ்ச்சியாகவும் காதலுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! “டாம்மி ஒருநாள் என் அம்மாவிடம் வந்து மரியானை திருமணம் செய்து தரும்படி, சாதாரண பிளாஸ்டிக் மோதிரத்தைக் காட்டிக் கேட்டார். அம்மாவுக்கு ஆனந்த அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. உடனே நகைக் கடைக்குச் சென்று திருமண மோதிரங்களை வாங்கி வந்தார். எங்கள் இருவரது குடும்பங்களைத் தவிர, மற்றவர்கள் டவுன்சிண்ட்ரோம் பாதிப்பில் இருப்பவர்களுக்கு திருமணம் அவசியமா என்று கேட்டனர். ஆனால் நாங்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகளில் இவர்களைப் போல அன்பான ஜோடியை நாங்கள் கண்டதே இல்லை. டவுன்சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. கற்றுக் கொள்வதில் சிரமம் இருந்தாலும் அவர்களாலும் திருமணம் செய்து, மற்றவர்களைப் போல இயல்பாக வாழ முடியும் என்பதை மரியான், டாம்மி ஜோடி நிரூபித்திருக்கிறார்கள்” என்கிறார் லின்டா. “என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என் திருமணம்தான். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்றபோது அதிர்ச்சியடைந்தேன். இரண்டாம் முறை கேட்டபோது மறுக்க முடியவில்லை” என்கிறார் மரியான். மரியானும் டாம்மியும் யாருடைய உதவியும் இன்றி, தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களின் 22-ம் ஆண்டு திருமண நாள் விழாவுக்கு வந்தவர்களும் ஃபேஸ்புக்கில் இவர்களது கதையைப் படித்தவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

வாழ்ந்து காட்டும் டவுன்சிண்ட்ரோம் ஜோடிக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்து குளத்திலிருந்து மீட்கப்பட்ட 25 வயது ஆமையைப் பரிசோதித்தபோது நாணயங்களை விழுங்கியிருந்தது தெரிந்தது. குளத்தைக் கண்டதும் நாணயங்களை வீசினால் அதிர்ஷ்டம் என்று தாய்லாந்து மக்கள் நம்புகிறார்கள். இதன்படி ஒரு குளத்தில் வீசிய நாணயங்களை அதில் இருந்த ஆமை தொடர்ந்து விழுங்கி வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல், நீந்த முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆமையை மருத்துவமனையில் சேர்த்தனர். பல்வேறு நிபுணர்களின் தலைமையில் ஏராளமான செலவில் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் 915 நாணயங்கள் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்டன. 5 கிலோ எடை உள்ள அந்த நாணயங்கள் எடுத்தவுடன் அந்த ஆமையின் உடலில் முன்னேற்றம் தெரிந்தது. திரவ உணவுகள் கொடுக்கப்பட்டன. முழுமையாக குணமடைய 3 வாரங்கள் ஆகும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று குடலில் பிரச்சினை ஏற்பட்டது. ரத்தம் நஞ்சாக மாறியது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் ஆமையைக் காப்பாற்ற முடியவில்லை. 80 ஆண்டுகள் வசிக்கக்கூடிய ஆமை 25 ஆண்டுகளில் மறைந்துவிட்டது.

மனிதர்களின் அறியாமையால் உயிரிழந்த ஆமை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x