Published : 23 Dec 2015 09:42 AM
Last Updated : 23 Dec 2015 09:42 AM

உலக மசாலா: வாழ்த்துகள் ஜார்ஜ்!

தொழில்முறையில் சாண்டா க்ளாஸாக இருப்பது மிகவும் கடினமான பணி. சிவப்பு வெல்வெட் ஆடையை மாட்டிக்கொண்டு, ஒட்டு தாடி, மீசையுடன் பரிசுப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு வருவது மட்டும் சாண்டாவின் வேலை இல்லை. சில சாண்டாக்கள் தங்கள் வேலையில் மிகவும் சிரத்தையாக இருக்கின்றனர். சாண்டாக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் 4 நாட்கள் கொலோரடோவில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 70 பேர் கொண்ட ஒரு குழு இதில் பங்கேற்கிறது. புகைப்படங்களுக்கு எப்படிக் காட்சித் தரவேண்டும், குழந்தைகளை எப்படி மடியில் அமர வைக்கவேண்டும், குழந்தைகள் கேட்கும் அசெளகரிகமான கேள்விகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்றெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

‘‘சாண்டாக்கள் மீது இருக்கும் அன்பால்தான் இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த சாண்டாக்கள் குழந்தைகளிடம் வேலை செய்யப்போகிறார்கள். அதனால் கவனமாக அவர்களைத் தேர்ந் தெடுக்கும் வேலையைச் செய்கிறோம். எங்கள் பல்கலைக்கழகம் மூலம் வெளிவரும் சாண்டாக்களில் 96 சதவீதம் பேர் அழகான, தொழில் முறை சாண்டாக்கள்.’’ என்கிறார் ஜுடி நோர். ‘‘9 ஆண்டுகளாக சாண்டா வாக இருந்து வருகிறேன். இங்கே பயிற்சி பெற்ற பிறகு இன்னும் சிறந்த சாண்டாவாக மாறிவிட்டேன்’’ என்கிறார் வேட் பர்லே.

ம்… நல்ல விஷயம்தான்!

கூகுள், டெஸ்லா, மெர்சிடிஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தானாக இயங்கும் காருக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. ஆனால் சான்பிரான்ஸ்சிஸ்கோவைச் சேர்ந்த 26 வயது ஹாக்கர் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டார். ஜார்ஜ் ஹோட்ஸ் தன்னுடைய திறமையால் சில ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவிலேயே சுயமாகக் கண்டுபிடித்துவிட்டார். 17 வயதிலேயே ஹாக் செய்ய ஆரம்பித்துவிட்ட ஜார்ஜ், கூகுள், ஸ்பேஸ்எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் சிறிது காலம் வேலை செய்தார். பிறகு தானாவே இயங்கும் காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று வெற்றிகரமாகத் தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டார். இன்னும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அர்ப்பணிக்க இருப்பதாகக் கூறுகிறார் ஜார்ஜ். தகவல் அறிந்த டெஸ்லா நிறுவனம், ஜார்ஜை மீண்டும் வேலைக்குச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தது.

‘நான் இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கவில்லை. தேவைப்படும்போது உங்களைத் தொடர்புகொள்கிறேன்’ என்று மெயில் அனுப்பிவிட்டார் ஜார்ஜ். இந்தத் தொழில்நுட்பம் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. அதைப் பார்த்த டெஸ்லா நிறுவனம், தன்னுடைய பிளாகில் ஜார்ஜை விமர்சனம் செய்து எழுதியிருந்தது. பெரிய நிறுவனத்தால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை, தனி மனிதர் செய்துவிட்டார் என்ற உண்மையை டெஸ்லா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். சந்தைக்கு வரும்போது உண்மை தெரியத்தான் போகிறது என்கிறார் ஜார்ஜ்.

வாழ்த்துகள் ஜார்ஜ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x