Published : 03 Apr 2015 11:39 AM
Last Updated : 03 Apr 2015 11:39 AM

உலக மசாலா: வருமான வரி கட்டும் பூனை!

இந்தோனேஷியாவில் மனிதனால் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 9000 முதல் 20000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டானி ஹில்மன். ஒரு பிரமிடு கட்டிடமாக இருக்கலாம் என்றும் வழிபாட்டுக்குரிய விஷயங்களை இங்கே காண முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இதுவரை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரமிடுகள் பிரேஸிலிலும் எகிப்திலும் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் முன்பே இந்தோனேஷியாவில் பிரமிடு கட்டப்பட்டிருக்கிறது. சுவர்கள், அறைகள், படிகள் எல்லாம் கொண்ட கட்டிடமாக இந்தப் பிரமிடு அமைந்திருக்கிறது. 311 அடி உயரமும் 400 படிகளும் கொண்ட மிகப் பெரிய கட்டிடம் இது.

அம்மாடி! மனிதன் மகத்தானவன் தான்!

உலகிலேயே மிகப் பணக்காரப் பூனை ஃபேஷன் டிசைனர் கார்ல் லாகெர்ஃபெல்ட் வளர்க்கும் பூனைதான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கார், அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களில் பங்கேற்கும் இந்தப் பூனையின் ஆண்டு வருமானம் சுமார் 18 கோடிகள். 3 வயதான இந்த வெள்ளை சியாமிஸ் பூனையின் பெயர் செளபேட். 82 வயது கார்லை விட செளபேட் அதிகம் சம்பாதிக்கிறது.

கார்லும் செளபேட்டும் நியூயார்க்கில் ஓர் இரவு தங்குவதற்கு 38 ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்கிறார்கள். இந்தப் பூனையைக் கவனித்துக்கொள்வதற்கு மட்டும் இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற விலங்குகளையோ, குழந்தைகளையோ இந்தப் பூனைக்குப் பிடிப்பதில்லை. கார்ல் மற்றும் இரண்டு உதவியாளர்களிடம் மட்டுமே அன்பாகப் பழகுகிறது பூனை. வெளியே செல்லும்போது புகைப்படம் எடுப்பதோ, செல்ஃபி எடுப்பதோ செளபேட்டுக்குப் பிடிக்காத விஷயங்கள்.

வருமான வரி எல்லாம் சரியா கட்டுதா!

ஜாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில் சுண்டெலிகள் பாட்டுப் பாடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆண் சுண்டெலிகள் பெண் சுண்டெலிகளைக் கவர்வதற்காக இந்தப் பாடல்களைப் பாடுகின்றன. ஆனால் சுண்டெலி பாடுவதை சாதாரணமாக மனிதர்களால் கேட்க இயலாது என்கிறார்கள் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பாடும் பறவைகளைப் போல, ஆண் சுண்டெலி பெண் சுண்டெலிக்காகப் பாடுகிறது. பெண் சுண்டெலி வருவதை உணர்ந்தவுடனோ, பார்த்தவுடனோ வேறு ஒரு பாட்டுக்கு மாறிவிடுகிறது என்கிறார்கள். அதாவது அலைந்து திரிந்து தேடி சக்தியை வீணாக்காமல், பாடி அழைக்கிறது ஆண் சுண்டெலி.

அடடா! அங்கேயும் பாட்டுப் போட்டி எல்லாம் நடக்குமா!

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் கப்பாடப்பா என்ற விநோதமான போட்டி ஒன்று நடைபெற்றிருக்கிறது. விதவிதமான தேநீர் தயாரிக்கும் கெட்டில்களை லேசர் மூலம் இயக்கி, எந்த கெட்டில் முதலில் வருகிறது என்ற போட்டியை நடத்தியிருக்கிறார்கள். பெரிய அறைக்குள்ளே சிறிய சுரங்கம், குன்று போன்றவை அமைத்து, போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த கெட்டில் போட்டியைக் காண டிக்கெட்கள் வாங்கிக்கொண்டு ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கெட்டிலும் வித்தியாசமான வடிவமைப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

புதுமையான போட்டியா இருக்கே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x