Published : 06 Aug 2016 09:47 AM
Last Updated : 06 Aug 2016 09:47 AM

உலக மசாலா: வண்ணத்துப்பூச்சிகளின் காவலர்!

டிம் வாங் வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சி கள் (California pipevine swallowtail) மிக அற்புதமான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. நகரங்களில் ஏற்படும் அபரிமிதமான முன்னேற்றங்களால் சான் பிரான்ஸ்சிஸ்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகின்றன. தனி ஒரு மனிதனாக பைப்வைன் ஸ்வாலோடெயில் வண்ணத்துப்பூச்சிகளின் அழிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார் டிம் வாங். நீர்வாழ் உயிரியலாளராக இருக்கும் டிம் வாங், தன்னுடைய ஓய்வு நேரங்களை வண்ணத்துப்பூச்சிகளுக்காகவே செலவிட்டு வருகிறார். ‘‘சின்ன வயதில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் மீது ஆர்வம் அதிகம். கம்பளிப்பூச்சியில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் மேஜிக் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

விடுமுறை நாட்களில் வண்ணத்துப்பூச்சிகளைத் தேடிக் கிளம்பிவிடுவேன். அவற்றின் வாழ்க்கை முறையை அனுபவத்தில் அறிந்துகொண்டேன். பைப்வைன் வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகிற தகவல் என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது. ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டேன். கலிபோர்னியா பைப்வைன் இலைகளைத்தான் இந்த வண்ணத்துப்பூச்சிகள் உண்டு வளர்கின்றன. பல இடங்களில் இந்தச் செடிகளைத் தேடி அலைந்தேன். இறுதியில் ஒரு தாவரவியல் பூங்காவில் கண்டுபிடித்து, சில கிளைகளைப் பறித்து வந்தேன். என் தோட்டத்தில் இந்தச் செடிகள் நன்றாக வளர்ந்தன. வண்ணத்துப்பூச்சிகளைத் தோட்டத்தில் விட்டேன். விரைவில் இந்தச் செடிகளை நாடி ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வர ஆரம்பித்துவிட்டன. அவை மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி, முட்டைகளை இட்டன.

முட்டைகளில் இருந்து லார்வா வெளியேறி, பைப்வைன் இலைகளைத் தின்று பியூபாவாக மாறின. பியூப்பா தங்களைச் சுற்றிக் கூடுகளைக் கட்டிக்கொண்டன. 4 வாரங்களுக்குப் பிறகு கூடுகளை உடைத்துக்கொண்டு வண்ணத்துப்பூச்சிகளாக வெளிவந்தன. இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமாக வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதற்காகச் சூழலியலாளர்கள் பாராட்டுகிறார்கள். ஏற்கெனவே இதுபோன்ற திட்டங்களைப் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டபோது, அவை தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால் நான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன். மனிதர்களின் செயல்களால்தானே இவை ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அதை மனிதர்களே சரி செய்வதுதானே முறை’’ என்கிறார் டிம் வாங்.

வண்ணத்துப்பூச்சிகளின் காவலர்!

பிரிஸ்பேனைச் சேர்ந்த ஹோலி ஹோட்சனுக்கு 12 வார கர்ப்பத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தையின் வயிற்றில் துளை உருவாகி, குடல் வெளியே வந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் குழந்தை பிறந்தால் பல சிக்கல்கள் உருவாகலாம், இயல்பான குழந்தையாக வளர வாய்ப்பில்லை என்றனர். ஆனால் ஹோலி ஹோட்சனுக்கும் அவரது கணவருக்கும் கருக்கலைப்புச் செய்ய விருப்பம் இல்லை. மருத்துவர்களின் எச்சரிக்கையைப் புறந்தள்ளினர். ஏழாவது மாதத்திலேயே பிறந்த குழந்தையின் குடல் முழுவதும் வெளியில் இருந்தது. ‘‘இந்தக் காட்சியைக் கண்டபோது உடைந்து போனேன். அழுகையும் கோபமும் வந்தது. எல்லோரும் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம் என்றனர்.

கணவர் என்னைத் தேற்றினார். எல்லாக் குழந்தைகளையும் போல என் குழந்தையும் அழகாக இருந்தது. சிரித்தது. 8 வாரங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம், குடல் வயிற்றுக்குள் வைக்கப்பட்டது. இன்று 7 மாதக் குழந்தையாக எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான் டெடி. மருத்துவர்கள், உறவினர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கி, ஆரோக்கியமாக இருக்கிறான்’’ என்று மகிழ்கிறார் ஹோலி ஹோட்சன்.

இனி குறையொன்றும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x