Published : 29 May 2016 12:17 PM
Last Updated : 29 May 2016 12:17 PM

உலக மசாலா: ரோலர்கோஸ்டர் உணவகம்

பிரிட்டனில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்கா ஆல்டன் டவர்ஸ். இங்கே சமீபத்தில் ‘ரோலர்கோஸ்டர் ரெஸ்டாரண்ட்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவுகள் தயாரிக்கப்பட்டு, சிறிய ரோலர்கோஸ்டர்களில் மேஜைக்கு வந்து சேர்கின்றன. மக்கள் மத்தியில் ரோலர்கோஸ்டர் உணவு விடுதிக்கு பெரிய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. உணவு விடுதியில் நுழைந்து, ஒரு மேஜையில் அமர வேண்டும். டேப்லட்டைப் பயன்படுத்தி எப்படி உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்று விளக்கம் தரப்படும்.

ஆர்டர் செய்த பிறகு, 26 அடி உயரத்தில் இருந்து ரோலர்கோஸ்டர்கள் மூலம் உணவுகள் மேஜைக்கு வந்து சேரும். இதில் ஒரே ஒரு சிக்கல்தான். ரோலர்கோஸ்டரைச் சுற்றி 4 மேஜைகள் இருக்கின்றன. அந்தந்த மேஜைகளுக்கான உணவு அங்கே போய் நிற்பதில்லை. மேஜைகளின் வரிசை எண்களைப் பார்த்து, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கான உணவு இல்லை என்றால், அடுத்த மேஜைக்குத் தள்ளிவிட வேண்டும். உணவுகள் இறுக்கமாக மூடப்பட்ட பாத்திரங்களில் வருகின்றன. குளிர் பானங்கள் பாட்டில்களில் வருகின்றன. அதனால் ஆபத்து நிகழ வாய்ப்பில்லை. சூடான காபி, தேநீர் என்றால் மனிதர்களே வந்து தருகிறார்கள். உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, ரோலர்கோஸ்டர்களை நிமிர்ந்து பார்த்தபடியே, ஆர்வத்துடன் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். உணவு வந்தவுடன், தாங்களே ரோலர்கோஸ்டர்களில் சுற்றி வந்தது போலப் பரவசப்படுகிறார்கள். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஆல்டன் டவர்ஸுக்கு வரும் மக்களுக்காக இந்த விடுதி திறந்திருக்கும். மாலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. ’’

பொழுதுபோக்கு பூங்காவுக்கு வருபவர்களுக்கு எங்கள் விடுதி நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பிரிட்டனில் இந்த விடுதியைப் போல இன்னொன்று கிடையாது’’ என்கிறார் ஆல்டன் டவர்ஸைச் சேர்ந்த கில் ரைலே. கடந்த ஆண்டு ரோலர்கோஸ்டர் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 5 பேருக்குச் செயற்கைக் கால்கள் வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. அதைச் சரி செய்வதற்காகவே ரோலர்கோஸ்டர்ஸ் உணவு விடுதியை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரோலர்கோஸ்டரில் வருவதால் உணவுகளின் சுவை அதிகமாகுமா என்ன?



எஸ்தோனியா நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் லீலா, லீனா, லிலி லூய்க் சகோதரிகள். ரியோடிஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதான இந்தச் சகோதரிகள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். ‘டிரையோ டு ரியோ’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, ஆதரவு தேடி வருகிறார்கள். மூவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டனர். ’’நாங்கள் மூவரும் குழந்தையிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருப்போம்.

மூவரும் நன்றாக நடனமாடுவோம். பிறகு தொழில்முறை விளையாட்டுகளின் மீது எங்கள் ஆர்வம் திரும்பியது. பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தோம். எங்கள் நாட்டுக்கு வெளியே எங்கள் திறமைகளைக் காட்ட வேண்டும் என்றால் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்பதுதான் சிறந்தது. நாங்கள் மூவரும் தனித்தனியாகவே வசிக்கிறோம். விளையாட்டுதான் எங்களை ஒன்றிணைக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உணர்வுபூர்வமாக ஆதரவு அளித்துக்கொள்வோம். விளையாட்டு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

உதவி செய்துகொள்வோம். கென்யா, இத்தாலி என்று நாங்கள் பயிற்சிக்காகப் பல நாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டோம். நாங்கள் மூவருமே போட்டியில் வெல்லும் அளவுக்குப் பயிற்சி எடுத்திருக்கிறோம். எங்கள் மூவரில் ஒருவராவது எங்கள் நாட்டுக்குப் பதக்கம் பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் லீலா.

உருவமும் திறமையும் ஒரே மாதிரி பெற்ற சகோதரிகளுக்கு வெற்றி கிடைக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x