Published : 03 May 2017 10:13 AM
Last Updated : 03 May 2017 10:13 AM

உலக மசாலா: ரிஸ்க் எடுக்கும் நிஜ ஸ்பைடர்மேன்கள்!

ஒவ்வோர் ஆண்டும் சீனாவின் ஆபத்தான மலைப் பகுதிகளைப் பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மலைகளின் மகத்துவம் பற்றி அறியாமல் கண்ட இடங்களிலும் குப்பைகளை வீசி விடுகின்றனர். மலைகளைச் சுத்தம் செய்வதற்காகவே ஸ்பைடர்மேன் க்ளீனர்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உயிரைப் பணயம் வைத்து தினந்தோறும் வேலை செய்துவருகிறார்கள். மலையைச் சுத்தம் செய்பவர்கள் ஸ்பைடர்மேன் ஆடைகளை அணிந்துகொண்டு, இடுப்பில் கயிற்றைக் கட்டி, செங்குத்தான மலைகளில் இறங்குகிறார்கள். ஆங்காங்கே வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற குப்பைகளைச் சேகரித்து வருகிறார்கள். சுத்தம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி, இப்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ஸ்பைடர்மேன் பணிக்காக ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதில், ‘ஆபத்து நிறைந்த மலைகளைச் சுத்தம் செய்யும் பணி. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். சொந்த விருப்பத்தின் பேரில் இந்த வேலையைச் செய்ய முன்வரவேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆரம்பத்தில் சில மலைகளை மட்டும் சுத்தம் செய்து, இந்த வேலையை நிறுத்திவிட நினைத்தனர். ஆனால் மக்கள் குப்பைகளைப் போடப் போட ஸ்பைடர்மேன்களுக்குத் தொடர்ந்து வேலைகளும் இருந்துகொண்டே இருந்தன. இன்று இவர்களால் ஆண்டுக்கணக்கில் சேர்ந்த குப்பைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்பைடர்மேன் பணிகளை நேரில் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் தவறை உணர்ந்து கொள்கிறார்கள். குப்பைகளும் குறைந்துவருகின்றன.

ரிஸ்க் எடுக்கும் நிஜ ஸ்பைடர்மேன்கள்!

ஜப்பானைச் சேர்ந்த டெசுடோவுக்கு ரயில் என்றால் மிகவும் விருப்பம். ரயிலைப் பார்ப்பதும் ரயிலில் பயணம் செய்வதும் விதவிதமாகப் படங்கள் எடுப்பதும் சுவாரசியமான விஷயம் என்கிறார். “எனக்கு ஏன் இப்படி ஓர் ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் எத்தனையோ தடவை ரயில்களைப் பார்த்தாலும் இன்றுதான் புதிதாக ஒரு ரயிலைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. சில நேரங்களில் வேலைகளை மறந்துவிட்டு ரயிலில் அப்படியே உட்கார்ந்திருப்பதும் உண்டு. என்னுடைய ஆர்வம் அன்றாட வேலைகளைப் பாதிப்பதால் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் வீட்டையே ரயில் பெட்டியாக மாற்றிவிட்டேன். ஹால், படுக்கையறை, சமையலறை, கழிவறை எல்லாமே ரயிலில் எப்படி இருக்கின்றனவோ அப்படியே வீட்டிலும் இருக்கின்றன. மனிதர்களின் சலசலப்பு, ரயிலின் ஓட்டம் போன்றவை இல்லாதது மட்டுமே குறை. 485 புகைப்படங்களை வைத்து இந்த வீட்டை உருவாக்கியிருக்கிறேன். வீடு ரயில் பெட்டியாக மாறும் தருணங்களைப் புகைப்படங்கள், வீடியோக்களாக ஆவணப்படுத்தியிருக்கிறேன். சமீபத்தில் இந்தப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன். பார்த்தவர்கள் பிரமித்துவிட்டனர்.

இப்படியும் ஒரு ரயில் பிரியரா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x