Published : 05 Apr 2017 10:26 AM
Last Updated : 05 Apr 2017 10:26 AM

உலக மசாலா: ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா?

சீனாவில் சமீபத்தில் பிரபலமான பாப் இசைக்குழு அக்ரஷ். இந்த இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரும் பெண்கள். ஆண்களைப் போல உடை, தலையலங்காரம், உடல்மொழி எல்லாம் மாற்றிக்கொண்டு இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்புதான் இவர்களின் இசை வீடியோ வெளிவந்தது. அதற்குள் பிரபலமடைந்துவிட்டனர். இசைக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆண்கள் என்று நம்புவதால், பெண் விசிறிகள்தான் அதிகமாக இருக்கிறார்கள். “2005-ம் ஆண்டு சீனாவில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற பட்டத்தை வென்ற பாப் ஸ்டார், ஆணைப் போன்றே இருந்தார். அதைப் பார்த்துதான் பெண்களை ஆண்களைப் போல மாற்றி ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. சீனா முழுவதும் தேடியதில் 10 பேர் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வானார்கள். அதில் ஐந்து பேருக்கு இரண்டு மாதங்கள் பயிற்சியளித்தோம். நாங்கள் நினைத்ததைப் போல பிரமாதமாக மாறினார்கள். எங்கள் குழுவை ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ அழைப்பதைவிட, ‘அழகான இளைஞர்கள்’ என்று அழைத்தால் போதும்” என்கிறார் நிறுவனர் ஜோவ் ஸியாவோபாய். “எங்கள் குழுவுக்குப் பெண் ரசிகைகள்தான் அதிகம். ஐந்து பேருக்கும் காதல் கடிதங்கள் குவிகின்றன. 15% ஆண்கள் எங்கள் மீது கொண்ட பொறாமையால் எதிரிகளாகப் பார்க்கின்றனர். எங்கள் குழுவைப் பற்றி ஆணா, பெண்ணா என்ற குழப்பம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் எந்தப் பாலினம் என்பதைவிட, எங்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்கிறார் இசைக் குழுவின் தலைவர் லு கெரான்.

ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா?

அமெரிக்காவின் தென் கரோலினாவில் வசிக்கும் பிராண்டி பென்னர், தன் 2 வயது குழந்தை சோபியாவை அழைத்துக்கொண்டு பொம்மைக் கடைக்குச் சென்றார். குழந்தைக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொம்மையைப் பரிசளிப்பதாகச் சொன்னார். குவிந்து கிடந்த பொம்மைகளில் ஓர் ஆப்பிரிக்க பொம்மையை அவள் தேர்ந்தெடுத்தாள். ஆச்சரியமடைந்த பிராண்டி, பொம்மைக்கு பில் போடும்படிச் சொன்னார். கடை ஊழியரோ, “உனக்கு இந்தப் பொம்மைதான் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். குழந்தை புன்னகையுடன் ‘ஆமாம்’ என்றாள். “உனக்குச் சரியாகத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. அங்கே நிறைய அழகான பொம்மைகள் இருக்கிறதே!” என்றார். மீண்டும் தனக்கு அந்தப் பொம்மைதான் பிடித்திருக்கிறது என்றாள் சோபியா. அப்படியும் அந்த ஊழியர் விடவில்லை. இந்தப் பொம்மை ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டார். “நான் மருத்துவராக விரும்புகிறேன். இந்தப் பொம்மையும் மருத்துவர். நான் ரொம்ப அழகா இருக்கேன். இந்த பொம்மையும் என்னைப் போலவே அத்தனை அழகாக இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறோம். இவள்தான் என்னுடைய தோழி” என்று குழந்தை சொன்னவுடன் கடை ஊழியரும் பிராண்டியும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

சோபியாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளணும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x