Published : 17 Dec 2015 11:16 AM
Last Updated : 17 Dec 2015 11:16 AM

உலக மசாலா: மூளையைப் பாதுகாக்கும் தொப்பி

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த சகோதரர்கள், மின்காந்த சமிக்ஞைகளில் இருந்து பாதுகாக்கும் தொப்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளில் இருந்து நமது மூளையைப் பாதுகாப்பதற்கு இந்தத் தொப்பி பயன்படுகிறது. செல்போனில் இருந்து வரும் சமிக்ஞைகள், வை-ஃபை சமிக்ஞைகள், மைக்ரோவேவ் அலைகள் மற்றும் மின்சார சாதனங்களில் இருந்து வெளிவரும் அலைகளில் இருந்து இந்த ஷீல்ட் தொப்பி பாதுகாக்கும். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே இந்தத் தொப்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

மின்காந்த அலைகள், பாக்டீரியா, துர்நாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இதை எளிதாகப் பராமரிக்கவும் முடியும். ஷீல்ட் தொப்பிகள் பல்வேறு அளவு களிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. 1,800 ரூபாயிலிருந்து 2,300 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. நவீன உபகரணங்களை வாங்கிக்கொண்டு, மின்காந்த அலைகளை எண்ணிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இந்தத் தொப்பி நிம்மதியைத் தந்திருக்கிறது.

நல்ல கண்டுபிடிப்பு!

***

சீனாவைச்சேர்ந்த 11 வயது சென் ஸியாவோலின் மிக வேகமாக ஸ்கிப்பிங் செய்யக்கூடியவர். சென்னின் ஸ்கிப்பிங் எண்ணிக்கையைக் கணக்கிடுவதே கடினம், அவ்வளவு வேகம். சமீபத்தில் 30 நொடிகளில் 108 தடவை குதித்து புதிய உலக சாதனையைப் படைதிருக்கிறார் சென். துபாயில் நடைபெற்ற உலக சாம்பியன் ஸ்கிப்பிங் போட்டியில் கலந்துகொண்டு, விளையாடினார். நடுவர்களின் கண்களுக்கு ஸ்கிப்பிங் கயிறே தெரியவில்லை. அவர்களால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. வீடியோவை 8 முறை மெதுவாக ஓடவிட்டுப் பார்த்து, 30 நொடிகளில் 108 தடவை குதித்திருப்பதாக அறிவித்தார்கள். அதே போட்டிகளில் 3 நிமிடங்களில் 548 தடவை குதித்து மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் சென்.

‘‘குவாங்ஸோவ் நகர் பள்ளியில் படிக்கும்போது தினமும் 1.5 மணி நேரம் பயிற்சி இருக்கும். எங்களது ஆசிரியர் 200 ஸ்கிப்பிங் வீடியோக்களைப் பார்த்து, புதிய ஸ்டைலை உருவாக்கினார். அவர் மூலம் எங்கள் பள்ளிக்கு 28 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன’’ என்கிறார் சென்.

உங்க வேகம் பிரமிப்பூட்டுது சென்!

***

சீனாவின் ஸாங்ஜியாகாங் நகரில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில், காற்றைச் சுத்தம் செய்வதற்காக ஒரு யுவான் அதிகமாக வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசாங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

‘‘நல்ல காற்றையும் சுத்தமான இடத்தையும் வழங்க வேண்டியது உணவு விடுதியின் பொறுப்பு. அதற்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பது தவறான செயல். இன்னும் 7 நாட்களுக்குள் காற்று பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.

காற்று, தண்ணீர்னு தனித்தனியா பில் போடுவாங்க போல…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x