Published : 02 Apr 2015 11:22 AM
Last Updated : 02 Apr 2015 11:22 AM

உலக மசாலா: மூன்று பேர் திருமணம்!

ரஃபேலா, ரோச்செலா, டகியானே பினி மூவரும் ஒன்றாகப் பிறந்த சகோதரிகள். பிரேஸிலில் வசிக்கும் இந்த மூன்று சகோதரிகளும் உருவத்தில், எண்ணத்தில், விருப்பங்களில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடி வந்த இவர்கள், திருமண நாளையும் ஒன்றாக வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ரஃபேலாவுக்கு 19 வயதிலேயே காதலர் கிடைத்துவிட்டார். ஆனாலும் ஒரே நாளில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதால் 10 வருடங்கள் காத்திருந்தார். 29 வயதில்தான் மூவருக்கும் மாப்பிள்ளைகள் அமைந்தனர்.

மூன்று சகோதரிகளும் ஒரே மாதிரியான ஆடை, தலை அலங்காரம், ஆபரணங்களை அணிந்திருந்தனர். மணமகன்களிடையே பயங்கரக் குழப்பம். யார் தன்னுடைய இணை என்று தெரியாமல் திண்டாடினார்கள்.

மாப்பிள்ளைகளுக்கு உதவும் எண்ணத்தில் மூவருக்கும் வெவ்வேறு பூச்செண்டுகளை அளித்து, அவர்களின் பெயர்களையும் சொல்லிவிட்டார் மாமியார். குழப்பம் தீர்ந்த மகிழ்ச்சியில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கலாட்டா கல்யாணம்!

இத்தாலியின் பைசா நகரில் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம். கோபுரம் அதிகமாகச் சாயும்போது விழுந்து விடாமல் இருப்பதற்காக புனரமைப்புப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் பணிக்காக ஏராளமாக செலவு ஆகிறது. அதைச் சரிகட்டுவதற்காக, கோபுரத்தின் சில தளங்களைத் தங்கும் விடுதியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

பணக்கார்கள் மட்டும் தங்கும் விதத்தில் ஓர் இரவு வாடகையாக சுமார் 13 லட்சம் ரூபாய் வசூலிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே சமைக்கும் வசதி கிடையாது. அறைகளை வாடகைக்கு விட்டால் தண்ணீர் வசதி, கழிவறை வசதி எல்லாம் செய்து தர வேண்டும். இந்தப் பழைய கட்டிடத்தைத் துளையிட்டு, தண்ணீர்க் குழாய்களைப் பொருத்த முடியுமா என்றும் யோசிக்கிறார்கள்.

வரலாற்றுப் புகழ் பெற்ற சின்னத்தை விடுதியாக மாற்றும் திட்டத்தையும், கட்டிடத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் திட்டத்தையும் ஏராளமானவர்கள் எதிர்க்கிறார்கள். இன்று யார் வேண்டுமானாலும் பைசா கோபுரத்தில் ஏறிச் சென்று கண்டுகளிக்கலாம். விடுதியானால் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.

கட்டிடம் ஆரம்பித்ததிலிருந்து பிரச்சினைகள் ஓயவே இல்லை

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரகா கம்மா வனப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஓர் அரியக் காட்சியைக் கண்டிருக்கிறார்கள். ஓர் ஒட்டகச்சிவிங்கியின் பிரசவத்தை நேரில் கண்டு வியந்துள்ளனர். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தது குட்டி.

நிலத்தில் விழுந்த குட்டியை அன்புடன் முத்தமிட்டது தாய். 15 நிமிடங்களில் குட்டியைச் சுத்தம் செய்துவிட்டது. பிறகு மெதுவாக எழுந்து நின்ற குட்டி, தாயிடம் பாலைக் குடித்தது. பிரசவம் நிகழும் வரை பெண் ஒட்டகச்சிவிங்கிக்கு அருகிலேயே ஆறுதலாக நின்றுகொண்டிருந்தது ஆண் ஒட்டகச்சிவிங்கி. இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

அதெல்லாம் சரி… ஒட்டகச்சிவிங்கியிடம் அனுமதி வாங்கினீங்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x