Published : 20 Sep 2016 10:09 AM
Last Updated : 20 Sep 2016 10:09 AM

உலக மசாலா: மூங்கில் ரயில்!

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடி யாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது! பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும் சென்று வருகின்றன. பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, ஒருகட்டத்தில் பயன்படுத்தா மல் கைவிடப்பட்டது. அந்தப் பாதையில்தான் மூங்கில் ரயில்கள் சென்று வருகின்றன. மூங்கில்களை வரிசையாக வைத்து மிதவை போலக் கட்டுகிறார்கள். இரு பக்கங்களிலும் இரும்புச் சக்கரங்களை இணைக்கின்றனர். முன் பகுதியில் சிறிய மோட்டார் வைத்துவிட்டால் ரயில் தயார். மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது. எதிரில் இன்னொரு மூங்கில் ரயில் வந்தால், எந்த ரயிலில் குறைவான ஆட்களும் பொருட்களும் இருக்கின்றனவோ, அந்த ரயிலைத் தூக்கி, நிலத்தில் இறக்கி வைத்துவிடுகிறார்கள்.

எதிரில் வந்த ரயில் கடந்த பிறகு, மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, இந்த ரயில் பயணத்தைத் தொடர்கிறார்கள். ரயில் கட்டணம் குறைவாக இருக்கும். எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனம், விறகுகள், நெல் மூட்டைகள், கால்நடைகள் என்று ஏகப்பட்ட சரக்குகளையும் இந்த மூங்கில் ரயில்கள் சுமந்து செல்கின்றன. மூங்கில் பெட்டிகள் அடிக்கடி உடைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் உடனே சரி செய்துவிடுவார்கள். கம்போடியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, மூங்கில் ரயில் மிகவும் பிரபலமடைந்தது. புதிய ரயில் பாதைகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் இயங்கி வந்த மூங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இன்று பட்டாம்பாங் பகுதிகளைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்வதாலும் வசதியாக இல்லாததாலும் எல்லோரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் மூங்கில் ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால், வித்தியாசமான ரயில் அனுபவத்தைப் பெற்றுவிடலாம்.

அதிவேக புல்லட் ரயில் காலத்தில் மூங்கில் ரயில்!

மனிதர்களுக்குப் போலவே விலங்குகளுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ‘‘விலங்குகளின் நோய்கள், வலிகள், ஜீரணப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது அக்குபஞ்சர். மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உதவி வரும் அக்குபஞ்சரை, விலங்குகளுக்குப் பயன்படுத்துவதில் மட்டும் மக்களுக்கு ஏனோ தயக்கம் அதிகம் இருக்கிறது. மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் அக்குபஞ்சர் பலன் அளிக்கிறது. வலியுடன் வரும் விலங்குகளுக்கு 2 ஊசிகள் குத்த ஆரம்பித்த உடனேயே, வித்தியாசத்தை உணர ஆரம்பித்துவிடுகின்றன.

14 வயது பூனை ஒன்று மிக மோசமான நிலையில் வந்தது. ஒருமுறை சிகிச்சை அளித்ததிலேயே ஓரளவு குணம் பெற்றுவிட்டது. அதேபோல நாய் களுக்கும் முயல்களுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம் கைகொடுக் கிறது. ஆனால் பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்’’ என்கிறார் கால்நடை அக்குபஞ்சர் மருத்துவர் நடின் ஹெட்லே.

அட! செல்லப் பிராணிகளுக்கும் அக்குபஞ்சர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x