Published : 11 Dec 2016 11:43 AM
Last Updated : 11 Dec 2016 11:43 AM

உலக மசாலா: மூக்குக் கண்ணாடிக்கு பாதுகாப்பு

அலீடா பெட்ரசா என்ற பெண், உலகிலேயே மிக வித்தியாசமான வேலையைச் செய்து வருகிறார். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் அமைக்கப்பட்டுள்ள ஜான் லெனன் சிலையின் மூக்குக் கண்ணாடியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க இசையமைப்பாளரும் பாடகரும் பாடலாசிரியருமான ஜான் லெனனின் பீட்டில்ஸ் பாடல்கள் உலகப் புகழ்பெற்றவை.

அமைதியையும் மனித நேயத்தையும் வலியுறுத்தியவை. கியூபப் புரட்சிக்குப் பிறகு, முதலாளித்துவத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பீட்டில்ஸ் இசைக்கும் தடைவிதிக்கப்பட்டது. இசையை நேசிக்கும் கியூப மக்களின் மனங்களில் ஜான் லெனன் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். கியூபா மீது அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ச்சியாக எதிர்த்தும் விமர்சித்தும் வந்தார் ஜான் லெனன். 40 வயதில் அமெரிக்க அடிப்படைவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜான் லெனனின் மனித நேயத்தையும் இசையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அப்போதைய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, வெண்கலச் சிலையை ஹவானா பூங்காவில் நிறுவினார். ஜான் லெனன் பெயரும் பூங்காவுக்கு வைக்கப்பட்டது. 2000 டிசம்பர் 8 அன்று ஜான் லெனனின் இருபதாவது நினைவு தினத்தில் வைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு, நிஜ மூக்குக் கண்ணாடியை அணிவித்திருந்தனர். ஆனால் தொடர்ச்சியாகக் கண்ணாடிகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன.

ஒரு மாதத்துக்குக் கண்ணாடி வாங்கும் செலவைவிட, காவலுக்கு ஆள் போட்டுச் சம்பளம் கொடுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. 72 வயது அலீடா கண்ணாடியைப் பாதுகாக்கும் பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகிறார். சிலைக்கு அருகில் அமர்ந்து செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சே குவேராவின் ஒன்றிரண்டு சிலைகளைத் தவிர, ஜான் லெனனுக்குத்தான் கியூபாவில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

தனக்குச் சிலை வைக்கக்கூடாது என்ற காஸ்ட்ரோ, ஜானுக்குச் சிலை வைத்ததில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 48 வயது மார்க் லீ, கையுறைகளை மட்டுமே புகைப்படங்கள் எடுத்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், சாலையில் அழுக்கான கையுறை ஒன்று கிடந்தது. அதைப் பார்த்துவிட்டு, நகர்ந்துவிட்டார். மறுநாள் இன்னொரு கையுறையைக் கண்டார். அப்போதுதான் கையுறைகளை மட்டும் புகைப்படங்கள் எடுக்கும் யோசனை வந்தது. அன்று முதல் ஆதரவற்றுக் கிடக்கும் கையுறைகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்தார். ‘ஒரு இலக்கை வைத்துக்கொண்டு, தேடுவது சுவாரசியமாக இருக்கிறது. எல்லாக் கையுறைகளும் தேவை இல்லை என்று கைவிடப்பட்டவை.

சில கையுறைகள் கிழிந்திருந்தன. சில கையுறைகள் அழுக்காக இருந்தன. கம்பளி, துணி, பிளாஸ்டிக், தோல் என்று விதவிதமான கையுறைகளைப் படம் பிடித்திருக்கிறேன். இதுவரை 300 புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் ஆரம்பத்தில் என்னை விநோதமாகப் பார்த்தனர். பிறகு புரிந்துகொண்டு, கையுறைகளை எங்காவது பார்க்க நேர்ந்தால் உடனே எனக்குத் தகவல் கொடுத்து விடுகிறார்கள். பலரும் அழுக்கான விஷயங்களை யாராவது புகைப்படங்கள் எடுப்பார்களா என்று முகம் சுளிக்கிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அழகு மட்டுமின்றி அழுக்கும் சேர்ந்ததுதான் இந்த உலகம். கண்காட்சிகள், காலண்டர் என்று என்னுடைய புகைப்படங்கள் பலரைச் சென்று அடைந்திருக்கின்றன’ என்கிறார் மார்க் லீ.

வித்தியாசமான ரசனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x